"God is in Our Land"

கடவுள் நம் தேசத்தில் உள்ளார் எனும் செய்தியைப் பரப்புங்கள்

கடவுள் நம் தேசத்தில் உள்ளார் எனும் செய்தியைப் பரப்புங்கள்:

 

இந்தியாவின் ஆன்மீக இறையாண்மையை இயன்ற மட்டும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது என்னும் முடிவுக்கு வந்தேன். இவ்வாறு செய்வதன்மூலம் ‘கடவுள் நம் தேசத்தில் உள்ளார்’ (அதாவது, கடவுள் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளார்) எனும் செய்தியைப் பரப்ப முடியும். இதைச் செய்வதற்கு பல உபாயங்களை எண்ணிப் பார்த்தேன். கோயில்களில் ஆன்மீக புத்தகங்களை விநியோகிப்பது, ஆன்மீகப் பணிகளுக்கு நன்கொடை வழங்குவது, ஆன்மீக இதழ்களை பொது இடங்களில் மக்களின் பார்வைக்கும், கருத்துக்கும் வைப்பது – இவற்றைக் குறித்தெல்லாம் யோசித்தேன்.

இக்கருத்துகளை நடைமுறைப் படுத்துவது குறித்த சாத்தியக் கூறுகளைப் பற்றி சமூகத்தில் விவாதித்தேன். ஒவ்வொரு கருத்திலும், ஏதாவதொரு குறை இருக்கவே செய்தது. இந்த விவாதங்களின் மூலம் நான் உறுதி செய்த உண்மைகள் இரண்டு.

முதலாவது, மக்களுக்கு ஆன்மீகத்தில் இருக்கும் ஆர்வத்தைப் பற்றியது. பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு, ஆன்மீக அனுபவங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களால் கூட, அதற்கான சரியான வழிகாட்டுதல் மற்றும் அறிவு கிடைக்கப்பெறாத நிலை இருந்தது. இன்று, நாம் அனைத்து வழிகளிலும் முன்னேறி உள்ளோம். அனைத்து விதமான ஆன்மீகப்பெட்டகங்களையும் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பெற்று விட முடியும். ஆனால் அந்த பொத்தானை அழுத்துவதற்குத் தான் யாரும் முன்வருவது இல்லை. நம்மில் பலரும் வேறு விஷயங்களின் பின் அலைந்து கொண்டிருக்கிறோம்.

எனவே, இந்தியாவின் அனைத்து ஆன்மீக நூல்களையும், ஒவ்வொரு வீட்டிலும் இலவசமாகவே நான் கொடுத்தாலும், அவர்கள் அந்நூல்களை பிரித்துப் பார்ப்பார்கள் என்பதற்கோ, அவற்றை கவனத்துடன் படிப்பார்கள் என்பதற்கோ எந்த உத்திரவாதமும் இல்லை. ஆதலால் வீட்டுக்கு வீடு விநியோகம் செய்யக் கூடிய செயல், ஆழ்ந்த கவனமும், சிந்தனையும் தேவைப்படுகின்ற ஆன்மீகப் பொக்கிஷங்களுக்கு ஏற்றது அல்ல. இருப்பினும் இத்தகைய ஆன்மீக நூல்களின் இருப்புத்திறனை அதிகமாக்குவதென்பது, ஆன்மீக உணர்வை பரப்புவதில் ஒரு நேர்மறையான நடவடிக்கையே ஆகும். இதை நாம் ஏற்கனவே பல இடங்களில், பலவிதமான வடிவங்களில் பெற்றுள்ளோம். எனவே, மிகவும் முக்கியமான கருத்துகளைச் சுருக்கமாக – உள்ளங்கை நெல்லிக்கனி போல் – அனைவரிடமும் பகிர்ந்து கொள்வது எனும் முடிவுக்கு வந்தேன்.

நான் கண்ட இரண்டாவது உண்மை என்னவென்றால், நன்னெறி மற்றும் ஆன்மீகக் கருத்துகள், சுய உதாரணங்களின் மூலம் நன்கு போதிக்கப்படுகின்றன. ‘உலகில் நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறிவிடு’ என்று காந்திஜி கூறியது இங்கு நினைவு கூறத் தக்கது. அன்பைப் போதிப்பதை விட, அன்பு செலுத்துவதினால் அது பல பேரைச் சென்றடைகிறது. தம்மைத் தாமே உணர்ந்து, தெய்வாம்சம் பொருந்தியவ்களாக இந்தியாவில் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானியர்களால் ‘கடவுள் நம் தேசத்தில் உள்ளார்’ எனும் செய்தி மௌனமாக பரப்பப்பட்டு வருகிறது. கடவுள் அனைவரிலும் உள்ளார் என்பதை நிருபிப்பதற்கு நாம் உண்மையில் மிகவும் கடினப்படவேண்டிய அவசியம் இல்லை. நம்முள் இருக்கும் தெய்வாம்சத்தை நாம் உணர முற்பட்டாலே போதுமானது. இங்கு முயற்சியே மிகவும் முக்கியமானது. விளைவு தானே நிகழும்.

‘கடவுள் நம் தேசத்தில் உள்ளார்’ என்பதை உணர்தல் ஒருவருடைய சமயம் சார்ந்தது. அது தனியொருவரின் சொந்த விஷயமாகும். ’கடவுள் நம் தேசத்தில் உள்ளார்’ என்பதை பரப்புதல் ஒரு இயக்கம் போன்றது. தம்முள் கடவுளை உணர்ந்த, உணர முற்படுகிற நபர்களே அந்த இயக்கத்தில் இடம் பெற்றிருக்க முடியும். இச் செய்தியை பரப்புவதற்கு அவர்கள் எந்தக் கூட்டத்தையும் கூட்டி சொற்பொழிவு ஆற்ற வேண்டியது இல்லை. அவர்களுடைய செயல்பாடுகளும், அவர்களைச் சுற்றி வீசும் நறுமணமுமே அந்த வேலையைச் செய்யும். இத்தகைய அர்ப்பணிப்புணர்வு உள்ளவர்கள் நமக்கு அதிகமாக தேவைப்படுகிறார்கள்.

ஆன்மீக விழிப்புணர்விலும், உலக நலனிலும் ஆழ்ந்த விருப்பம் உள்ளவர்களையே நான் ‘அர்ப்பணிப்புணர்வு உள்ளவர்கள்’ என்று குறிப்பிடுகிறேன்.

உலக நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதை நிரூபனம் செய்ய ஒருவர் கீழ்க்காணும் ஐந்து நெறிகளை (இந்தியா பேசுகிறது என்னும் நூலில் சமயம் சார்ந்த கலாச்சாரம் எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை) கடைபிடிப்பவராக இருக்க வேண்டும்.

இறை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:

உங்களுடைய தெய்வீகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இயல்பாகவே மனிதர்களும், மற்ற ஜீவராசிகளும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்று அனைத்து குருமார்களும் கூறுகின்றனர். இந்த உண்மையை உணரும் சாத்தியக்கூறு மனிதர்களுக்கு அதிகமாக உள்ளது. எனவே, மனிதர்கள் தம்முள்ளும், புறமும் நிலவும் தெய்வீகத் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள முற்படுபவராக இருக்க வேண்டும். ஒருவர் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்; ஆனால், யாராலும் கடவுள் தன்மை என்ற ஒன்றை மறுத்துவிட முடியாது. ஏனெனில், அது அனைவரின் உள்ளேயும் உள்ளது. அத்தன்மை, சிலரிடம் நிபந்தனையற்ற அன்பாகவும், சிலரிடம் ஆத்ம ஞானமாகவும், சிலரிடம் எளிமை, பணிவு முதலான பண்புகளாகவும் உள்ளது.

மேலும், கடவுள் நம்பிக்கை உடைய ஒருவர், தனது நம்பிக்கையில் பொதிந்திருக்கும் உண்மையை அனுபவமாய் உணர்ந்தவராயின், அவர் ‘இறை உணர்வு’,கடவுள் தன்மை’ போன்ற சொற்களுக்கு, வேறு எவருக்கும் விளங்காத ன்னொரு விளக்கத்தை வழங்குவார்.

கடவுளை நிலையற்ற அற்ப விஷயங்கள் பொருட்டு எங்கெங்கோ தேடுவதை விடுத்து, தம்முள் இருக்கும் கடவுள் தன்மையை, இறை உணர்வை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும். அவ்வாறாக முயல்பவர், ஒரு நாள் ‘தாமே இறைவன்’ என்பதைத் தெரிந்து கொள்வார். மனித வாழ்வின் முடிவான இலக்கே இதுதான். இந்த முடிவான இலக்கை, ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமாக அணுகுகிறார். இந்த தேடுதலுக்கான தீவிரம், நபருக்கு நபர் மாறி இருக்கிறது. தேடுதலுக்கான தீவிரம் உறுதியாக இருந்தால், தடைகள் யாவும் மறைந்துவிடும். தனது தெய்வீகத்தை ஒத்துக் கொள்ளுதல் என்னும் இந்த மரபு மனித குலத்தில் நிலவும் பலவிதமான எதிர்மறை எண்ணங்களை வேரறுப்பதில் முதன்மையானதாகத் திகழ்கிறது.

இயற்கையோடு இயைந்து வாழுங்கள்:

உலக நலனில் அக்கறை கொண்டவர், தன்னுடைய சுற்றுப்புற சுகாதாரதைப் பேணுபவராக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் விளைந்த பொருட்களை உபயோகப்படுத்துபவராகவும், அவ்வாறு செய்வதை ஊக்குவிப்பவராகவும் இருக்க வேண்டும். மரங்களைக் காப்பவராக இருக்க வேண்டும். இந்த நெறியை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, ஊறு விளைவிக்காத ஒரு மரக் கன்றை (குறைந்தபட்சம் ஒன்று), தனது இருப்பிடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும்.

அந்த மரக்கன்றின் நிலைமையே, அவருடைய அர்ப்பணிப்புணர்வை பறைசாற்றிவிடும். அந்த மரக்கன்று நன்றாக வளர்ந்து வந்தால், அவரும் தனது நெறிகளில் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார் என்று பொருள். அம் மரக்கன்று நல்ல முறையில் வளரவில்லை எனில், அதன் பொருள், அவர் அம்மரக் கன்றை வளர்ப்பதற்காகவும், தனது ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் மேலும் முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதாகும்.

உயிர்களுக்கு துன்பம் இழைக்காதீர்கள்:

‘கடவுள் நம் தேசத்தில் உள்ளார்’ எனும் செய்தியைப் பரப்புவதில் ஆர்வம் உள்ளவர்கள், உயிர்களுக்கு தீங்கு இழைக்காதவர்களாக இருக்க வேண்டும். தமது சொந்த வாழ்வில் அஹிம்சையை கடைபிடிப்பதற்குச் சான்றாக, இயன்ற மட்டும் அவர்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருக்க வேண்டும்.

பெற்றோரை வணங்குங்கள்:

உலக நலனில் அர்ப்பணிப்பு உள்ளவர்கள், மூத்த குடிமக்களை – குறிப்பாக பெற்றோரை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். தமது பெற்றோர், நியாயமான முறையில், மகிழ்ச்சியாக வாழ்வதை உறுதி செய்பவர்களாக இருக்க வேண்டும்.

ஒருவனுக்கு ஒருத்தி எனும் நிலைப்பாட்டுடன் வாழுங்கள்:

இறைச்செய்தியை பரப்ப விரும்புவர்கள், சட்டப்பூர்வமாகவும், நேர்மையின் அடிப்படையிலும் ஒருவருடன் மட்டும் இல்வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணைகளை இஷ்டம் போல் மாற்றிக் கொள்பவர்களாக அவர்கள் இருத்தல் கூடாது.

உலக நலனில் நாம் செலுத்தும் கவனம், உண்மையானதாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஆதாரமாக நம்முள் உருவாகும் எண்ணங்களும் உண்மையானதாக இருக்க வேண்டும். உள்ளே எதிர்மறை எண்ணங்களை வைத்துக் கொண்டு, வெளியே உலக நலனில் அக்கறை உள்ளவர்களாக நடிப்பதால் பயன் ஏதும் இல்லை. தீராத வலிகளையும், நோய்களையும் உள்ளே மறைத்துக் கொண்டு, மேம்போக்காக குணம் பெற்றவர்கள் போல் நடிப்பதைப் போன்றது இது.

எனவே, அர்ப்பணிப்புணர்வு உள்ளவர்கள், உலக நலனைப் போலவே ஆன்மீக விழிப்புணர்வில் தீவிர கவனம் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

ஆன்மீக விழிப்புணர்வுக்கு சில அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. இதைப் பற்றி ஆன்மீக நூல்கள் விரிவாக கூறியிருந்தாலும் முக்கியமான ஐந்து அம்சங்களை இங்கு காண்போம். அவையாவன: தூய்மை, ஸ்திரத் தன்மை (உறுதி), உண்மை, அன்பு மற்றும் சுய சோதனை. எண்ணங்களில் தூய்மை, தூய்மையில் உறுதி, உறுதியில் உண்மைத் தன்மை, அந்த உண்மையின் ஆணி வேராக சுயநலமற்ற அன்பு, இவையனைத்தையும் கண்காணிக்கும் சுய சோதனை.

சுய சோதனையே சோதனைக்குள்ளாகும் போது, இந்த பண்புகளை அறிவுறுத்தி, சுட்டிக் காட்டி, தவறுகளைத் திருத்தி வழி நடத்த தன்னை உணர்ந்த ஒரு குரு தேவை. அவர் எந்த மதத்தை சார்ந்தவராகவும் இருக்கலாம் -குருவுக்கான ஒரே ஒரு அளவுகோல், அவர் தமது தெய்வத் தன்மையை உணர்ந்தவராக இருப்பது மட்டுமே. தகுதியான குரு அமையாத பட்சத்தில் இறைவனையே குருவாக எண்ணி வழி நடத்துமாறு இறைஞ்சலாம்.

இவ்வாறாக, சுய சோதனை மூலமாகவும், அதற்கும் மேலாக குருபக்தி மற்றும் தெய்வ பக்தி மூலமாகவும் உள்ளத்தில் தூய்மை, உறுதி, உண்மை, சுய நலமற்ற அன்பு, முதலியவற்றை நிலைபெறச் செய்து, அகங்காரம் ஒழிந்து, தன் நிலையில் இருக்க முனைதலே ஆன்மீக விழிப்புணர்வின் அடிப்படையாகும். உலக நலனில் விருப்பம் (அன்பு வழி), ஆன்மீக விழிப்புணர்வில் நாட்டம் (ஞான வழி) – இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் உண்மையாய் இருந்தால் போதும்; மற்றொன்று தானே விளையும்.

இந்த நெறிகளில் எதுவும் புதியது அல்ல; காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருபவை. இந்த நெறிகள் அனைத்தையும் தனனார்வத்துடன் தனது வாழ்வில் கடைபடிப்பவர்கள், இந்தியாவின் செய்தியை பரை சாற்றுபவர்ளாக இருக்கிறார்கள். தமது உதாரண வாழ்க்கையின் மூலம் தன்னைச் சார்ந்து உள்ள பல பேரின் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றியமைப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இதுவே ‘கடவுள் நம் தேசத்தில் உள்ளார்’ எனும் செய்தியைப் பரப்பும் உண்மையான வழியாகும்.

அத்தகைய அர்ப்பணிப்புணர்வு கொண்டவர்களில் ஒருவராக இருந்து இந்தியாவின் சிறந்த தொன்மையை பரை சாற்ற எப்போதும் முயற்சி செய்வேன்.

இந்தியா தனி நபர்களிடம் பேசுகிறது, தனி நபர்களின் ஆன்மீக மற்றும் வாழ்வியல் நெறிகளை மலரச் செய்ய முயற்சிக்கிறது. தனி நபர்கள் தங்களது கடமைகளை சரிவரச் செய்யும் போது, குழுக்களும் சரியாகச் செயல்படுகின்றன. ஆகையால், யாதாவதொரு வழியில் தனி நபர்களிடம் காலம் காலமாக இந்தியா பேசி வருகிறது.

சமூக மாற்றங்கள், பொருளாதார முன்னேற்றம், அரசியல் சக்தி இவையனைத்தும் இந்தியாவில் ஓரளவு எட்டப்பட்டுள்ளன. ஆனால், தனி நபர்களின் வாழ்வியல் நெறிகளும், ஆன்மீக நெறிகளும் கீழே சென்று கொண்டிருக்கின்றன. அதிகார பலம் கொண்ட சில தனி நபர்களின் பொருந்தாத கொள்கைகளினால், இந்தியாவின் குரல், பெரும்பாலான தனிநபர்களிடம் சென்றடையாமல் உள்ளது. அந்த சில தனி நபர்களால், இந்தியா தடம் மாறி பயனித்துக் கொண்டிருக்கிறது. தனி நபர்கள் திரும்பவும் தமது உன்னதமான, ஆன்மீக நெறிகள் சார்ந்த வழிக்கே திரும்ப வேண்டும்.

தனி நபர்களின் மாறாத இயல்பை நினைவூட்டுதலே, இந்நூலின் நோக்கமாகும். நான் குடும்பங்களிடமோ, கல்வி நிறுவனங்களிடமோ, அரசியல் கட்சிகளிடமோ அல்லது வேறு குழுக்களிடமோ பேசும்போது உண்மையில் அக்குழுக்களில் உள்ள தனி நபர்களிடம்தான் உரையாடுகிறேன். இந்தியா தனது ஆன்மீகம் சார்ந்த கலாசாரத்தை, அர்ப்பணிப்புணர்வுள்ள தனி நபர்கள் மூலம் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது. உன்னதமான உலகத்தை உருவாக்குவதில் இந்தியாவின் பங்கு, இந்த ஆன்மீகம் சார்ந்த கலாசாரத்தை ஊக்குவிப்பதில் தான் உள்ளது.

ஒவ்வொருவரும் தமது தெய்வீகத் தன்மையை அடையாளம் கண்டு கொள்வதையும், கொண்டாடுவதையும் இந்தியா விரும்புகிறது. இதற்காக அவரவர் வழியில், அவரவர் முயற்சிப்பதை இந்தியா வரவேற்கிறது. சிலைகளையோ, பிற அடையாளங்களையோ நம்பியிருக்கிறீர்களா? அடையாளங்கள் ஏதும் இல்லாமல் வழிபடுகிறீர்களா? உணர்வு பூர்வமாக இறைமையை அணுகுகிறீர்களா? அல்லது அறிவு பூர்வமாக அணுகுகிறீர்களா? இவையனைத்தையும் ஏற்றுக் கொள்கிறீர்களா? அல்லது இதில் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களா? எப்படி வேண்டுமானாலும் இருங்கள். ஆனால், யாதாவதொரு முறையில் தம்முடைய தெய்வத் தன்மையை உணர்ந்து கொள்ளவும், கொண்டாடவும் முயற்சி செய்து கொண்டே இருங்கள். தெய்வீகத்தை தம்மிடமும், எல்லா இடத்திலும் காண முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

இதுவே, உலகத்துக்கான இந்தியாவின் செய்தியாகும். இந்தியாவின் சமயங்களும், கலாசாரமும் இந்த தன்னறிதலைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. தன்னை உணர்ந்தவர்களாலேயே அமைதியான குடும்பங்களும், இயற்கைச் சூழலும், அமைதியான உலகங்களும் அமைகின்றன.

உன்னதமான மனிதர்களைப் பெறுவோம். உன்னதமான தேசங்களை உருவாக்குவோம். இந்த உலகை மேலும் ஒளி பெறச் செய்வோம்.