"God is in Our Land"

இயற்கையுடன் இணக்கமான வாழ்வு

இயற்கையுடன் இணக்கமான வாழ்வு:

 

“மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான நாடுகளே இயற்கையுடனான சம நிலையைப் பேணுகின்றன. சுமார் முப்பது நாடுகள், இச் சமநிலையை இழக்கும் மிக அபாயமான காலகட்டத்தில் உள்ளன. இந்தியாவும், அவற்றுள் ஒன்று”. வானொலியில் இச் செய்தியை சில வருடங்களுக்கு முன் (1990 கள்) கேட்டேன்.

இயற்கை…

சுத்தமான நீர், விரிந்த கடல், இனிமையான- இதமான தென்றல், நீலவானம், பசுமையான நிலப்பரப்பு, தூய்மையான இதயம், மேலும் இதுபோன்ற பலவும் இயற்கையின் அங்கங்களே. தன் நிலை மாறாமல், மாசுபடாமல் இருக்கும் அனைத்துமே இயற்கைதான். என்னைக் கேட்டால் தூய்மை என்பது இயற்கையின் இன்னொரு பெயார் என்பேன்.

நான் இங்கு இயற்கை என்னும் சொல்லைப் பற்றி விவரிப்பதற்காக வரவில்லை; இயற்கைக்காகப் பேசவே வந்துள்ளேன். இயற்கை நமது தாய். நமது தாய் மிகுந்த பொறுமையையும், அன்பையும் பெற்றுள்ளாள். ஆனால், நாம் அவ்வாறில்லை.

எங்கு நோக்கினும் தூய்மைக்கேடு, கலப்படம். நாம், நமது சுயநலமான முன்னேற்றத்திற்காக நமது தாயையும், அவளுடைய மற்ற குழந்தைகளையும் கொடுமைப்படுத்தி வருகிறோம். அறிவியல், ஆராய்ச்சி, பாதுகாப்பு சோதனை, பொருளாதார வளர்ச்சி, நவீன வழிமுறை – இந்த பெயர்களால், நாம் நமது தாயை மௌனமாக கொன்று வருகிறோம்.

எந்த அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியும் நிகழக் கூடாது என்று நான் கூறவில்லை. நான் கூறுவது இதுதான் – அந்த வளர்ச்சிகள் இயற்கையோடு இயைந்து நடைபெற வேண்டும். மனிதனுடைய அழியக்கூடிய வளர்ச்சிக்கும், அழியக்கூடாத இயற்கை அன்னைக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றினால், இயற்கைக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

வெளிப்புற சூழலில் நிலவும் மாசுகளால், நம்முடைய உள்புற சூழலும் மாசடைந்துள்ளது. இதையே மாற்றியும் கூறலாம். நமது தாய் வெளிப்புற மாசுகளால் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளாள். அவள், நம்முள் நிலவும் மாசுகளால் படும் துன்பங்களே அதிகம். நாம் மலிவான ரசனைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலும், அரங்குகளிலும் காண்கிறோம். மலிவான இசையைக் கேட்கிறோம். மலிவான இன்பங்களைத் தேடி அலைகிறோம். சுருங்கச் சொல்வதானால், நவீனம் அல்லது முன்னேற்றம் என்னும் பெயரில் மன அமைதியையும், மனத்தூய்மையையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

எதற்காக இந்த கீழ்த்தரமான ஆசைகள்? நமது இயல்பான வாழ்வை வாழ்வோம். (இதன் பொருள் – குகைகளிலும், காடுகளிலும் ஒளிந்து கொண்டு வசதிகளின்றி வாழலாம் என்பதல்ல, நாம் எங்கு வாழ்ந்தாலும், வெளிப்புற மற்றும் உள்புற தூய்மையோடு வாழவேண்டும். இதுவே, இயற்கையோடு இயைந்த வாழ்வு.) நாம் இயற்கையை எந்த விதத்திலும் துன்புறுத்தாமல் இருப்போமாக. இயற்கையோடு இயைந்த வாழ்வு, இயற்கைக்கு எதிரான வாழ்வு – இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் நீங்கள் இருந்தால் முதலாவது விருப்பத்தை தயங்காமல் தேர்ந்தெடுங்கள் – இரண்டாவது விருப்பம் அதிகமான ஆதாயங்களைத் தருவதாக இருந்தாலும் கூட. இயற்கையை காயப்படுத்துவது என்பது நமது இயல்பு அல்ல. ‘இயற்கையை காயப்படுத்தாமல் வாழவே முடியாது’ என்று நாம் கருதுவதால், அச்செயலை நாம் நமது இயல்பாகவே மாற்றி விட்டோம். குறைந்த பட்சம், இயற்கைக்கு எதிரான நமது மாசு அளவை குறைத்துக் கொள்ளவாவது முயற்சி செய்வோம். இது, இயற்கையை காப்பதற்கு மட்டுமல்ல – நம்மை நாமே காத்துக் கொள்வதற்காகவும்தான். இயற்கை இல்லையேல், நாமும் இல்லை.

தொழில் நிறுவனத்தாருக்கு ஒரு வார்த்தை

மிக அதிக அளவில் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், பின்வரும் விஷயங்களைத் தீவிரமாக யோசிக்கவேண்டும்.1) சுற்றுப்புறத்தை சீர் குலைக்காமல் தொழில் செய்வதற்கான மாற்று வழிகள் உள்ளதா? அல்லது 2) அந்த மாசுகளை மிகவம் குறைப்பதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா? இந்த இரு கேள்விகளுக்கும் நேர்மறை பதில்கள் இல்லாத பட்சத்தில், அவர்கள் தம் தொழிலையே மாற்றிக் கொள்வது உத்தமம். குறிப்பிடும்படியான அளவுக்கு இயற்கை சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் வரும் சொகுசான வாழ்வும், நூதனங்களும் மனிதர்களுக்குத் தேவை இல்லை. குளிர் சாதன அறையில் ‘சொகுசாக’ பல பிரச்சனைகளுடன் வாழ்ந்து சீக்கிரமாக இறப்பதை விட, எளிமையான வீட்டில் ‘ஆனந்தமாக’ பல காலம் வாழ்வது மேல்.

சாமானிய மக்களுக்கும் இயற்கையைப் பேணுவதில் முக்கிய பங்கு உள்ளது. சுற்றுப்புறச் சூழலுடன் ஆரோக்கியமான உறவு கொண்டிருக்க ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் கடினமானதொரு செயல் அல்ல. கீழ்க்காணும் விஷயங்களில் ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்வில் கவனம் செலுத்தினாலே, அதுவே மிகப்பொிய முன்னேற்றத்தை சுகாதாரத்தில் ஏற்படுத்தும்.

× புகைபிடிப்பதன் மூலமாகவும், வாகனங்களில் அதிகப் படியாக புகை வெளியிடுவதின் மூலமாகவும், எச்சில் உமிழ்தல் மூலமாகவும், மலம் கழித்தல் மூலமாகவும், பொது இடங்களை மாசு படுத்துதல் கூடாது.

× தமது இல்லங்களை, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் செயல்களால் மாசுபடுத்துதல் கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குப்பைகளும், அழுக்குகளும் அதற்குறிய இடங்களில் சேர்ப்பிக்கப்படவேண்டும் – பொது இடங்களிலோ, தெருக்களிலோ அல்ல.

× ஒவ்வொருவரும் நீர் நிலைகளை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

×ஒவ்வொருவரும் தமது பகுதிகளில் உள்ள மரங்களைப் பாதுகாக்க வேண்டும்.

×யாரும் பொமுது போக்குக்காகவோ, பணத்துக்காகவோ மிருகங்களைக் கொல்லுதல் கூடாது.

இயற்கையை நீங்கள் மாசுபடுத்தினால் அல்லது அதற்குக் காரணமாக இருந்தால், உங்கள் தாயின் தூய்மையைச் சீர்குலைக்கும் செயலைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். நமது தாயையும், அவருடைய அனைத்து குழந்தைகளையும் நேசிப்போமாக. நமது அன்பை எண்ணங்கள் மூலமாகவும், செயல்கள் மூலமாகவும் வெளிப்படுத்துவோமாக.

சுற்றுப்புறத்தை பேணுவதில் ஆட்சியாளர்களுக்கும் உரிய பங்கு உள்ளது. இயற்கை வளங்களை அவர்கள் காக்க வேண்டும். இயற்கை வளங்களைச் சுரண்டி, அதன் சமநிலையைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அவர்கள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.