"God is in Our Land"

இந்த காலகட்டத்தின் தேவை

இந்த காலகட்டத்தின் தேவை:

 

பள்ளிகளில் நன்னெறிக் கல்வி:

“ஒரு பள்ளியைத் திறப்பவன் பல சிறைச்சாலைகளை மூடுகிறான்” என்னும் ஆங்கிலப் பழமொழி எப்பொழுது உண்மையாகும் என்றால், அவன் நன்னெறிக் கல்வியைத் தனது பள்ளியில் போதிக்கும் போதுதான். இன்றைய தினங்களில் அத்தகைய பள்ளிகளை நாம் காண முடிவதில்லை அல்லது அவற்றை அறிதாகவே காண முடிகிறது. பொதுவாகச் சொல்வதானால், இன்றைய பள்ளி, நன்னெறிகளைத் தவிர மற்ற அனைத்தையும் போதித்து, பல சிறைச்சாலைகள் திறக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

இங்கு, சிறை என்னும் சொல், செங்கற்களாலும், இரும்பாலும் கட்டப்பட்டுள்ள இறுக்கமான புற சிறைச்சாலைகளை மட்டும் குறிப்பிடவில்லை. இது, மலிவான உணர்ச்சிகளாலும், குறுகலான சுயநலமிக்க மனதாலும் மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டுள்ள மனச்சிறைகளையும் குறிப்பிடுகிறது.

உன்னதமான நன்னெறிக் கல்வியை அளிக்கும் முன்னோடிப் பள்ளிகளை, ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர் குறிப்படுவது போல் ‘வாழும் முறை பள்ளிகளை’ நிறுவுவதே தற்காலத்தின் அவசரத் தேவையாகும். இப்பள்ளிகளுக்கு உரிய தேவையான சூழ்நிலைகளை அளிப்பதும், அவற்றை உறுதிப்படுத்துவதும் நாம் செய்ய வேண்டிய முக்கிய பணிகளாகும்.

பள்ளிகளில் குறிப்பிடும்படியான அளவிற்கு, நமது நேரத்தையும் முயற்சிகளையும் நன்னெறிக் கல்விக்காக – உண்மையான கல்விக்காக – செலவிட வேண்டும்.

“நன்னெறிக்கல்வி”அல்லது “உண்மைக்கல்வி” என்னும் பெயரில் அனைத்துப் பள்ளிகளிலும், தனியாக ஒரு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம், முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இப்பாடத்திட்டம் செயல்படுத்தப்படவேண்டும்.

இந்த பாடத்தில் தத்துவார்த்தமான விஷயங்களும், நடைமுறை வாழ்க்கை சார்ந்த விஷயங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். நன்னெறித் தேர்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தனித்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். இத்தேர்வுகளில் சோதிக்கப்பட வேணடியது மாணவர்களின் தனி மனித ஒழுக்கமே –அவர்களுடைய புத்திக் கூர்மையோ அல்லது பொது அறிவோ அல்ல. நன்னெறிப் பாடத்தில் மோசமான செயல்பாடுள்ள மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனமும், அறிவுரைகளும் அளிக்கப்பட வேண்டும். இத்தகையான பாடத்திட்டம் அனைத்து மாணவர்களிடமும் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்று சிலர் வாதிடலாம். சிலருக்கு அது ஒவ்வாததாக இருக்கலாம் என்பதற்காக, ஒட்டு மொத்தமாக அனைவருடைய நலனையும் நாம் புறக்கணித்து விட முடியாது. சரியான கல்வியை தனது சந்ததியருக்கு கொடுக்கும் கடமை, இந்த சமுதாயத்தினருக்கு உள்ளது. தனது மூதாதையர்களுடைய உயரிய பண்புகளை அறிந்து கொள்ளும் உரிமை, குழந்தைகளுக்கு உள்ளது. இதையெல்லாம் நடைமுறைப்படுத்துவது என்பது எளிதான ஒன்று இல்லை என்பது உண்மை. ஆனால், அது இயலாத ஒரு இலக்கு அல்ல என்பதும் உண்மை. இச்செயல் நம்முடைய உண்மையான முயற்சிகளுக்கான தேவையையும், தகுதியையும் பெற்றுள்ளது.

ஞானம் மற்றும் அன்பாகிய விழிக் கமலங்களை மலரச் செய்யும் படியாக உள்ள நமது இந்திய கலாச்சாரத்தின் உயரிய பண்புகளைப் போதிக்கும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் பண்புகள், மனம் மற்றும் உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகளில், பெற்றோர்களின் பங்கு மிகப் பெரியதாகும். ஆனால், பிரச்சனை என்னவென்றால் 90% அல்லது அதற்கும் மேலான பெற்றோர்கள், சமநிலைச் சீரான வாழ்க்கையை மேற் கொண்டிருக்கவில்லை. பண்பு நலன், மன நலன், உடல் நலன் குறித்த கல்வி அவர்களுக்கே தேவைப்படுகிறது. எனவே, அவர்களால் குழந்தைகளுக்கு ஏற்றதொரு சூழ்நிலைகளைத் தர முடிவதில்லை. பெற்றோரின் இந்த குறைபாட்டை சமுதாயம் நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான், இந்த பொறுப்பை சமுதாயம் பள்ளிகளுக்குக் கொடுத்துள்ளது. நமது முன்னோர்களும், குருகுலக் கல்வி முறையின் மூலமாக இதையே செய்தார்கள். குருகுல ஆசிரியர்கள் நல்லொழுக்கம் என்ற அஸ்திவாரத்தை அனுசரித்து, பரந்த அறிவையும், வீரியத்தையும், திறமைகளையும் பெற்றிருந்தார்கள். ஆனால் தற்போதைய பெரும்பாலான ஆசிரியர்கள், நற்பண்புகள் எனும் அடிப்படையைத் தவிர்த்து, மற்ற எல்லாப் பாடங்களிலும் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். உலகாயதமான கல்விகளில் திறமை பெற்றிருப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால் குணநலன்கள் சார்ந்த விஷயங்களிலும் அவர்கள் முன்னோடிகளாக செயல்பட்டால்தான், குழந்தைகளிடமும் அத்தகைய பண்புகளை நாம் எதிர்பார்க்கமுடியும்.

தற்போதைய கல்வி முறை, முழுமையை அளிக்கக் கூடியதொரு மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. அந்த மாற்றம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்றால், நற்பண்புகளை உறுதியான அடித்தளமாகக் கொண்டுள்ளதாக இருக்க வேண்டும். உடல் ரீதியான, அறிவு ரீதியான, கலைப்புலன் சார்ந்த முன்னேற்றங்கள் நமக்கு ஆனந்தத்தையும், அமைதியையும் தந்துவிடாது. நல்லொழுக்கமானது, தன்னம்பிக்கை மற்றும் இன்னபிற வலிமைகளையும் விட முக்கியமானது. பண்பு நலன், மற்ற எல்லாவிதமான நலன்களையும் விட முக்கியமானது.

பள்ளிகளும், ஆட்சி செய்பவர்களும் இந்த கல்வி முறையைக் கொண்டு வருவதற்காக மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. ‘நன்னெறிப் பாடம்’ என்று புதியதாக ஒரு பாடத்தை கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று அவர்கள் கருதினால், அக்கருத்துகளை மொழிப் பாடத்திலேயே இடம்பெறச் செய்யலாம். தற்போதைய பள்ளிகள் அனைத்தும் – அவை எந்த பாடத் திட்ட முறையை பின்பற்றினாலும் (CBSE, Matric, சமச்சீர் கல்வி முறை) – ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிப் பாடங்களைப் பெற்றிருக்கும். இந்த மொழிப் பாடத்தில், நன்னெறி மற்றும் ஆன்மீகக் கருத்துக்களை இடம்பெறச் செய்யலாம். இந்த மொழிப் பாடத்தில், சில பொதுவான செயல்முறை வகுப்புகளை – பிராணாயாமம், எளிதான யோகாசானங்கள் முதலியன – கொண்டு வருவது, மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். மொழிப் பாடத்தையே, இவ்விதமாக நன்னெறிப் பாடமாக மாற்றலாம். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும், உலகில் உள்ள அனைத்து நாடுகளும், யாதாவதொரு மொழியை போதித்து வருகின்றன. அதன் மூலமாகவே மற்ற பாடங்கள் (அறிவியல், கணிதம் முதலியன) போதிக்கப்படுகின்றன. இந்த மொழிப் பாடம் என்பது நனனெறிகளும், ஆன்மீக சிந்தனைகளும் நிரம்பியதாக இருக்கட்டும். இயல்பாகவே, மாணவர்கள் அடுத்த நிலைக்கு அல்லது வகுப்புக்கு செல்ல தேர்ச்சி பெற வேண்டுமானால் அவர்கள் மொழிப் பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்விதமாக, அனைத்து மாணவர்களுக்கும் நன்னெறிக் கல்வியை அழுத்தந்திருத்தமாக போதிக்க முடியும்.

தற்போதைய பாடத்திட்டத்தில் நன்னெறிக் கருத்துகளோ, ஆன்மீக கருத்துளோ இல்லை என்று கூறி விடமுடியாது. அவை இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் மாணவர்களின் மனங்களைத் தொடும் அளவிற்கு, ஒரு தாக்கத்தைக் கொடுக்கும் அளவிற்கு இடம் பெற்றிருக்கவில்லை. நன்னெறி மற்றும் ஆன்மீக கருத்துகள் அளவிலும், பண்பிலும் குறிப்பிடும்படியான விகிதத்தில் அதிகமாக இடம் பெற்றிருக்க வேண்டும். இதை நாம் செய்ய முடியும் என்றால், இன்னும் அமைதியான, ஆனந்தமான ஒரு உலகத்தை நம்மால் காண முடியும்.

நன்னெறிக் கல்வியின் விளைவுகள்:

இக்கல்வியின் நோக்கம், அனைவரும் தங்களுடைய உண்மையான அடையாளத்தை – ஆத்ம அடையாளத்தை உணர்ந்து கொள்ள நியாயமானதொரு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அவர்கள் அந்த வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்கிறார்களா, இல்லையா என்பது அவர்களுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலான விஷயமாகும். இந்த நன்னெறிக் கல்வியைப் போதிப்பதால், தங்களது பிள்ளைகள் சந்நியாசிகளாகி விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களுக்குத் தேவையில்லை. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை தரமானதாகவும், திடமானதாகவும் மாற்றுவதே இக்கல்வி முறையின் பயனாகும். இதனால், அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும், சமுதாய வாழ்க்கையும் கூட தரமானதாகவும், உறுதியானதாகவும் மாறிவிடுகின்றன. எதிர்காலத்தில் அவர்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் – அது அமைதியும், நிம்மதியும், ஆத்ம ஆனந்தமும் நிறைந்த ஒன்றாக இருக்கும். இதைத்தானே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக விரும்புகிறீர்கள்?

ஊடகவியலாருக்கு ஒரு வார்த்தை

நாம் உதாரணக் கல்வி முறையைக் கொண்டு வர முயற்சி செய்யும்போது, தவறான கல்வி புகட்டப்படாமல் தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இங்கு, வெவ்வேறு பரிமாணங்களிலும் செயல்படுகின்ற மக்கள் தொடர்பு ஊடகங்கள், கூட்டாக ஆற்ற வேண்டிய பங்கு உள்ளது. மக்கள் தொடர்பு சாதனங்கள், இளைய தலைமுறையினரிடம் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன. இளைய சமுதாயத்தினர் ஒளிக்காட்சிகளை மிகவும் ரசிக்கின்றனர். அவற்றைத் தங்கள் சொந்த வாழ்வில் பிரதிபலிக்க விரும்புகின்றனர். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் சிறுவன், உண்மையின் அடையாளமாக இருந்த ராஜா ஹரிச்சந்திரரின் கதையை ஒளிக்காட்சியாக, நாடக வடிவில் கண்டான். அதன் தாக்கமாக அச்சிறுவன், அவனுடைய காலகட்டத்தில் இன்னொரு ஹரிச்சந்திரனாகவே விளங்கினான். 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இன்னொருவன், ஒரு திகில் திரைப்படைத்தைக் கண்டான். அதன் தாக்கமாக தனது குடும்பத்து நபர்களையே கொன்றான். திரைப்படங்களும், மற்ற பொமுதுபோக்கு சாதனங்களும் இளைய சமுதாயத்தினரிடம் எந்த அளவுக்கு தாக்கத்தைச் செலுத்துகின்றன என்று பாருங்கள்.

சமூக ஊடகங்கள், ஒரு கதாநாயகனை பின்வருமாறு சித்தரிக்கின்றன. அவன் பாலியலுணர்வு மிக்கவனாக இருப்பான். ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பெண் நண்பர்களைப் பெற்றிருப்பான்: அவனுடைய எதிரிகளை புஜபலத்தாலும் ஆயூதங்களாலும் எதிர் கொள்வான். அப்பாவி குழந்தைகள், தங்கள் வாழ்க்கையிலும் இதையே பின்பற்ற முனைகின்றனர். நாய்களுக்கும் பெண் நண்பர்கள் உண்டு; அவையும் புஜபலத்தோடு சண்டையிட்டுக் கொள்கின்றன.

மலிவான உணர்ச்சிகளை உதாசீனம் செய்து, தனது மன உறுதிப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து உள்புற மற்றும் வெளிப்புற காரணிகளையும் துணிச்சலோடு எதிர்கொள்பவன் எவனோ, அவனே ஒரு உண்மையான கதாநாயகன் ஆவான். அவனுடைய ஆயூதங்களாவன: தன்னடக்கம், தன்னம்பிக்கை, மன்னிக்கும் மனம். ஆயூதங்களையும், பலத்தையும் கொண்டு யார் வேண்டுமானாலும் மற்றவருடைய தலையை சிதறடிக்கச் செய்ய முடியும். ஆனால், தம்முள்ளே இருக்கும் மன்னிக்கும் குணத்தாலும், அமைதியாலும் எத்தனை பேரால் தீமையை விரட்டியடிக்க முடியும்? இப்பண்பு, அனைவராலும் விரும்பத்தக்க அழகான ஒன்று அல்லவா?

மக்கள் தொடர்பு சாதனங்கள் மனித குல மேம்பாட்டிற்காக பெரிதும் வருந்தி உழைக்க வேண்டியது. அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான். குரூரங்களையும், மலிவான எண்ணங்களையும் வீரம், காதல் என்னும் பெயர்களால் பரப்பாமல் இருப்பதுதான். முடிந்தால் இளைய தலைமுறைக்கு அவர்கள் இதைச் சொல்லட்டும் – வாழ்க்கை என்பது சதைகளையும் (பாலுணர்வு), காகிதங்ளையும் (பொருளாசை) தாண்டி மேலாக நிற்பது. மீண்டும், மீண்டும் மனித வாழ்வின் முடிவான குறிக்கோளையும், ஆரோக்கியமான உலக வாழ்வின் அவசியத்தையும், இயற்கையைப் பாதுகாப்பதற்கான தேவையையும், குடும்ப வாழ்விற்கான உயரிய கோட்பாடுகளையும் மக்கள் தொடர்பு சாதனங்கள் அறிவுறுத்திக் கொண்டே வந்தால், தற்காலம் பொற்காலமாக மாறத் தொடங்கும். அனைவருக்காகவும், அவர்கள் இந்தச் சேவையைச் செய்தால் மலிவான விஷயங்களுக்கும் மேலான, விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் அவர்களை தாமே வந்தடையும்.

இவ்வாறாக, கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகிய இவ்விரண்டும் உண்மையான நன்னெறிக் கல்வியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.