"God is in Our Land"

இந்தியாவின் பங்கு: மீளப்பெறல்

இந்தியாவின் பங்கு – மீளப்பெறல்:

 

மீளப்பெறுதல் என்பது செயல்பாட்டில் உள்ளது – வெறும் தத்துவங்களில் அல்ல.

ஒவ்வொரு தனி மனிதனும் தனிப்பட்ட சிந்தனைளைப் பெற்றுள்ளான். ஒவ்வொருவரும் மாறுபட்டிருக்கும் பார்வைகளையும், கருத்துகளையும் கொண்டுள்ளனர். ஆனால் ஒவ்வொரு தனி மனிதனுடைய செயல்பாடும், ‘மனித வர்க்கத்தின் மிகவும் பொதுவான அம்சங்கள்’ என்னும் கோட்டைப் பற்றியதாய் அமைய வேண்டும். அந்த பொதுவான அம்சங்கள் யாதெனில்,

 • இறை உணர்வை வளர்த்துக் கொள்ளுதல்,
 • பிற உயிர்களிடம் பாரபட்சமற்ற மரியாதையை வைத்திருத்தல்,
 • இயற்கையுடன் இயைந்து வாழுதல்.

ஒரு தனி மனிதன் மேற்குறிப்பிட்ட பொதுவான விதிகளின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வானேயானால், அவன் உலக அமைதிக்கான தன் பங்களிப்பை செவ்வனே ஆற்றுகிறான் என்று பொருள். இது, செயல்முறைக்கு எளியதாகத் தோன்றுகிறது. ஆனால், இது செயல்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பெரும்பாலான மக்கள், மனிதனுக்கு உரிய இந்த பொது விதிகள் வழி நின்றால், இந்த சமுதாயத்தில் அமைதியையும், மகிச்சியையும் நாம் காணலாம். இந்தியாவின் பொற்காலம், பெரும்பாலானவர்களை இந்த பொதுவிதிகளின் கீழ் கொண்டிருந்தது. ஏனெனில், அப்போதைய ஆட்சியாளர்கள், கீழ்க்காணும் காரணிகளின்பால் அக்கரை செலுத்தபவராய் இருந்தனர்.

அக்காரணிகள்:

1. தரமான கல்வி – அதாவது வெறும் பொருள் சார்ந்த வாழ்க்கையை மட்டும் கூறாமல் ஆத்ம விழிப்புணர்வு, அடிப்படை பண்பாடு, ஒமுக்கம் முதலியவற்றையும் போதிக்கும் முழுமையான கல்வி.

2.முறையான நீதி, அதாவது அனைவருக்கும் பொதுவான, நேர்மையான நீதி.

3.சரிசமமான வளர்ச்சி – அதாவது இயற்கைச் சமநிலைக்கும், பிற உயிரினங்களின் சுதந்திரத்திற்கும் ஊறு விளைவிக்காத வளர்ச்சி.

இந்தியாவையும், இந்த உலகையும் மீட்பதற்கு, ஆட்சியாளர்கள் மீண்டும் இந்த காரணிகளின்பால் அக்கரை செலுத்தவேண்டும்.

ஆட்சியாளர்களின் கவனத்துக்குரிய முக்கிய மூன்று விஷயங்கள்

உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி சில வார்த்தைகளை எழுதியிருந்தேன். அவற்றை ஒரு மதிப்புமிக்க நபரிடம் காட்ட நேர்ந்தது. அது இந்தியா மிகவும் மோசமான ஒரு பூகம்பத்தை சந்தித்த நேரம். அந்த துயரச் செயல், இயல்பாகவே உலக நாடுகளின் பச்சாதாபத்தையும், உதவியையும் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது. இதைச் சுட்டிக்காட்டிய அந்த பெரியவர், உலகில் சகோதரத்துவம் நன்கு நிலை கொண்டிருப்பதாகவும், ஏற்கனவே வலிமையாக இருக்கும் மனித நேயத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். சில மாதங்களுக்குள், அமெரிக்காவில் மிக மோசமான மனித நேயமற்ற வன்முறைச் செயல் நடந்தேறியது. அத்தருணத்தில் பலர், உலக தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான முயற்சியில் அமெரிக்காவுடன் கைகோர்த்து நின்றனர். இந்த நிகழ்வுக்கு முன்பாகவே, தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக, ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை நான் எனது எமுத்துக்களில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இது மட்டுமே தீர்வு ஆகாது. தீவிரவாதத்தால் இன்னொரு துயரச்சம்பவம் நடக்காது என்று அறுதியிட்டுக் கூற யாராலும் முடியாது. இந்த சூழ்நிலையை, சேதமடைந்திருக்கும் ஒரு கப்பலுடன் ஒப்பிடலாம். நீர் கப்பலினுள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இப்போது உடனடியாகவும், ஒரே சமயத்திலும் செய்ய வேண்டிய விஷயங்கள் இரண்டு. 1. நீர் உள்ளே வருவதற்குக் காரணமாக இருக்கும் ஓட்டைகளை அடைப்பது. 2. ஏற்கனவே ஊடுருவியிருக்கும் நீரினை வெளியேற்றுவது. கப்பலின் ஓட்டைகளை அடைத்து சரிசெய்வதே தீர்வு. உள்ளேயிருக்கும் நீரை வெளியேற்றுவது என்பது கப்பலைக் காப்பதற்கான முயற்சியில் துணை நிற்பது. அதே நேரத்தில் அவசியமானதும் கூட. இதுபோலவே, உலகை மீட்பதற்கான ஒரே வழி, மனிதர்களை உருவாக்குதல் – சரியான கல்வி, சரியான எண்ணங்கள், முறையான வாழ்க்கை இவற்றைப் பெற்றிருக்கும் மனிதர்களை அதிக எண்ணிக்கையில் பெற்றிருத்தல். தவறு செய்பவர்களை தண்டிப்பது என்பது, உலக அமைதியைக் காப்பாற்ற துணை நிற்கும் செயல். அதே நேரத்தில் தேவையானதும் கூட.

மூன்றாவது விஷயம் சீரான முன்னேற்றத்தை செயல்படுத்துவதாகும். சீரான முன்னேற்றம் என்பது நின்றிருக்கும் கப்பலை கரையை நோக்கி செலுத்துவதைக் குறிக்கிறது.

சீரான முன்னேற்றம் என்பது – இறை நிலையில் பற்று, உயிர்களிடம் மரியாதை, இயற்கையுடன் நட்பு – ஆகிய முன்னரே குறிப்பிடப்பட்ட பொது அம்சங்களோடு ஒத்திருக்கிற ஒட்டுமொத்த வளர்ச்சிகளையும் குறிப்பிடுகிறது.

இந்த மூன்று விஷயங்களும், உலகம் இருக்கும் மட்டும், ஆட்சியாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி செயல்படுத்த வேண்டிய முக்கியமான அம்சங்கள்.

இந்த அம்சங்கள் நடைமுறைக்கு வரும்போது, தனிப்பட்டவர் வாழ்விலும், தேசத்தின் வாழ்விலும், உலகின் போக்கிலும் சுவாரஸ்யமான, விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படும். இதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. நாம் இணைந்து செயலாற்ற வேண்டி இருக்கிறது. சாமானியர்களாக நாம் செய்ய வேண்டியதெல்லாம், உலக நலனில் உண்மையாகவே அக்கரை உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு, நமது இதயப்பூர்வமாக ஒத்துழைப்பை வழங்குவது தான். இதை நாம் செய்தே ஆக வேண்டும்.

மீட்சிக்கான வழிகள் இங்கே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

தரமான கல்வி:

 • பள்ளிகளில், வாழ்க்கை நெறிக்கல்வி கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களே, அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படவேண்டும்.
 • நமது கலாச்சரம் மற்றும் பாரம்பரிய பண்புகள் குறித்த அடிப்படைக் கல்வி பள்ளிகளில் போதிக்கப்படவேண்டும்.
 • வாழ்க்கையின் நோக்கம் மற்றும் நமது தேசத்தின் குணநலன்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்படவேண்டும்.

முறையான நீதி

பொதுவான விதிகள்:

  • உண்மையான மதச்சார்பின்மை,  பொதுவான விதிகள் பின்பற்றப்படவேண்டும்.
  • சுற்றுப்புறச் சூழலைக் காப்பாற்ற கடுமையான சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
  • நீதிமன்ற நெறிமுறைகள் இன்னும் எளிமையாக்கப்பட வேண்டும்.
  • துரிதமாக நீதிகிடைக்கச் செய்ய வேண்டும்.
  • நீதிமன்றங்களின் ஆணைகள் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

முறையான தண்டனைகள்:

 • போதுமான அளவிற்கு பாதுகாப்பு அமைப்புகள்.
 • தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகள்.
 • உலகத்தில் நிலவும் வன்முறைச் செயல்களை ஒடுக்க கூட்டு நடவடிக்கைகள்.
 • இயற்கைச் சமனைச் சீரழிக்கும் விதத்தில் செயல்படும் தொழிற் சாலைகளையும், தனி நபர்களையும் தடுத்து நிறுத்துதல்(அ) தண்டித்தல்.
 • சமயம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களைக் கொச்சைப் படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள்.
 • பொழுதுபோக்குத்துறையில் கலாச்சாரத்தைக் காக்கும் வகையில் விதிமுறைகள் – அவற்றை மீறுபவர்களுக்கு உரிய தண்டனைகள்.
 • மிருகங்களை வேட்டையாடுபவர்களுக்கும், காட்டு வளங்களை பாழாக்குபவர்களுக்கும் கடும் தண்டனைகள்.

சீரான முன்னேற்றம்

பாரம்பரியமான வழிமுறைகள்:

   • கலாச்சார நிகழ்வுகள், நாடு முழுவதும் தமது இயல்பான நற்பண்புகளுடன் நடத்தப்பட வேண்டும்.
   • கிராமங்கள் தூய்மையுடனும், தமது நாகரிகம் கெடாமலும் திகழ முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
   • சமய வழிபாட்டுத்தலங்கள் தூய்மையுடனும், நித்திய வழிபாடுகளுடனும் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
   • உலக அமைதிக்காவும், நன்மைக்காகவும் புராதணமான வழிபாட்டுச் சடங்குகள், சமய வழிபாட்டுத்தலங்களில் நடத்தப்பட வேண்டும்.
   • ஆத்ம ஞானத்தைப் போதிக்கும் நூல்கள், அனைத்து சமய ஆலயங்களிலும் மக்களுக்காக வைக்கப்பட வேண்டும்.
   • இயற்கையான விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
   • விவசாயம் சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
   • காட்டு வளங்கள் மற்றும் விலங்குகள் உண்மையான தீவிரத்துடன் காப்பாற்றப்பட வேண்டும்.

நவீன வழிமுறைகள்

   • தகவல் தொழில்நுட்பத்தை வளர்த்தல்
   • போக்குவரத்துத் துறையில் முன்னேற்றம்
   • நவீன பாதுகாப்பு முறைகளை வளர்த்துக் கொள்ளுதல்
   • சுற்றுப்புற சுகாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பேணுதல்
   • புதுமையான, பெரிய அளவிலான எரிபொருள் உற்பத்தி மையங்களை இயற்கைச் சமனைப் பாதிக்காத வகையில் பெற்றுக் கொள்ளுதல்.

நவீன தொழல்நுட்ப முன்னேற்றங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் முக்கியவத்துவத்தை நாம் ஏற்கனவே உணர்ந்துள்ளோம்; அவற்றை ஓரளவு செயல்படுத்தியும் வருகிறோம். ஆனால் தரமான கல்வி, முறையான நீதி, மனிதனின் பண்பினை செதுக்கி, சீராக்கும் புராதனமான வழிமுறைகள் இவற்றைச் செயல்படுத்துவதில் மெத்தனமாய் உள்ளோம்.

தன்னை ஆளத்தெரிந்த ஒருவரால் இந்த தேசம் ஆளப்பட வேண்டும். அத்தகைய மனிதர்களை பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், மக்களுக்காக செயல்படும் அரசு அலுவலகங்களிலும் பெற்றோமானால், உலகத்துக்காக தமது சிறப்புகளை இன்னும் திறமையோடு வெளிப்படுத்தும் ஒளிமிக்க இந்தியாவைப் பெறுவோம்.

இது இந்தியாவின் மீட்சி மட்டும் அல்ல. இது உலகத்தின் மீட்சி.

ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் அமைப்புகளும், தனி நபர்களும் கூட இந்தியாவின் மீட்சிக்காக சுயமாக செயலாற்ற வேண்டியுள்ளது. அது இங்கே சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் அமைப்புகளின் பங்கு

   1. கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளோர், ஆத்ம விழிப்புணர்வு மற்றும் பண்பு சார்ந்த கல்வியைப் பள்ளிகளில் கொண்டு வருதல்.
   2. பொழுதுபோக்குத் துறையினர், தரம் மலிந்த விஷயங்களைத் தவிர்த்தல்.
   3. தொழிற்சாலைகள், இயற்கைச் சமனைப் பாதிக்காத வகையில் செயல்படுதல்.

தனி நபர்களின் பங்கு

ஆன்மீகம் சார்ந்த இந்திய கலாச்சாரத்தை கடைப்பிடித்தல்.

இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்கள்: இறை உணர்வை வளர்த்துக் கொள்ளுதல், பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காதிருத்தல், இயற்கையோடு ஒத்துவாழ்தல், பெற்றோரை மதித்தல், ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நிலைப்பாட்டுடன் வாழ்தல்.

மேற்குறிப்பிட்ட பண்புகள், மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்தாலும், அவற்றில் கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள குடும்பம் சார்ந்த பண்புகள், இந்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஏனென்றால், இந்திய கலாச்சாரம் குடும்ப வாழ்க்கைக்குரிய நெறிமுறைகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த கடைசி இரண்டு நெறிகளும் – சமயங்கள் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டு, பின்பற்றப்படுகின்ற மிகப் பொதுவான பண்புகளாகும்.

பெற்றோரை மதித்தல் என்னும் பண்பை இராமாயணக் காலம் தொட்டே, அதற்கும் முன்பிருந்தே நாம் கண்டும், கடைபிடித்தும் வருகிறோம். “ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நிலையோடு வாழ்தல்“ – இந்த பண்பும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு தனித்துவம் வாய்ந்த அடையாளமாகும். இந்த பண்பை, இந்திய கலாச்சாரத்தின் மகுடம் என்றுகூட சொல்லலாம். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோது, ஒருவர் சுவாமிஜியிடம் இவ்வாறு கேட்டார். ”இந்திய கலாச்சாரத்தைப் பற்றி மிகவும் பெருமையாக, உயர்வாக கூறுகிறீர்களே, உங்கள் கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்தைவிட எவ்விதத்தில் உயர்ந்தது?” அதற்கு விவேகானந்தரின் பதில்: ”உங்கள் தாயைத்தவிர, பிற பெண்களை நீங்கள் மனைவியாக பார்க்கிறீர்கள். ஆனால் இந்தியன், தனது மனைவியைத் தவிர பிற பெண்மணிகளைத் தாயாக பாவிப்பான்.” இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்: ”சீதா தேவி, இந்திய பெண்மணிகளுடைய பண்பின் அடையாளம்.” எனவே, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உறவுமுறைப்படி வாழ்வது என்பது, இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பண்பாகும். இது பாலுணர்வை கட்டுக்குள் வைப்பதை மட்டும் குறிப்பிடவில்லை. மொத்த ஆசைகளையும் கட்டுக்குள் வைக்க வேண்டியதின் அவசியத்தையும் இது நினைவுறுத்துகிறது.

துரதிருஷ்டவசமாக, குடும்பம் சார்ந்த இந்த இரண்டு பண்புகளுமே, இந்தியாவில் இப்போது தடுமாற்றத்தில் உள்ளன.

தனியார் அமைப்புகளிலும், அரசு அமைப்புகளிலும், தனி மனித பண்புகளுக்கு மதிப்பளித்து, அவற்றை கடைபிடிக்கும் மனிதர்கள் அதிக அளவில் பணியாற்றும்போது, இயல்பாகவே இந்த தேசமும், உலகமும் சந்திக்கும் பிரச்சனைகள் பெருமளவு குறையும்.