"God is in Our Land"

இந்தியாவும், இந்த செய்தியும்

இந்தியாவும், இந்த செய்தியும்:

 

இந்தியாவுடன் தொடர்புபடுத்தாமலேயே, இந்த செய்தியை (‘கடவுள் நம் தேசத்தில் உள்ளார்’) நாம் இதுவரை கண்டிருந்தாலும், இந்தியாவுக்கும், இந்த செய்திக்கும் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. ஸ்ரீபரமஹம்ச யோகானந்தர் தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு கூறுகிறார்: ”சோடோம் நகரம், நேர்மையான பத்து நபர்கள் அங்கு இருக்கும்பட்சத்தில் அவர்களின் பொருட்டு, அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்” என்று அப்ரஹாம் கடவுளிடம் வைக்கும் விண்ணப்பமும், அதற்கு இறைவன், ”நான் அந்த நகரத்தை அந்த பத்து பேருக்காக அழிக்காமல் விட்டு வைப்பேன்” என்று பதிலிறுப்பதும், இந்தியாவின் அழியாத்தன்மை குறித்த ஆய்வில், ஒரு புதிய அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. வரலாற்றின் ஒரு காலகட்டத்தில், இந்தியாவின் சமகாலத்தைய, வலிமை வாய்ந்த, போர் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றிருந்த, பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரேக்கம், ரோமாபுரி முதலான பேரரசுகள் காணாமல் போயின. (இந்தியாவின் கலாச்சாரம் இன்றும் நிலைத்து நிற்கிறது)”.

”இறைவனின் பதில் ஒரு விஷயத்தை தெளிவாக்குகிறது. அது யாதெனில், ஒரு நாடு நீடித்து வாழ்வது என்பது, அதனுடைய பொருள் சார்ந்த சாதனைகளால் அல்ல; மாறாக அதனுடைய தனித்துவம் பொருந்திய மனிதர்களால்தான். எந்த ஒரு நாடு, இலஞ்சம் கொடுத்து ஏமாற்றமுடியாத (பாரபட்சமற்ற) இறைவனின் கண்ணோட்டத்தில், உயர்ந்தவர்கள் என்று சொல்லத்தக்க பத்து பேரை உருவாக்க வல்லதோ, அந்த நாடு அழிவு என்பதைக் காணாது.”

இத்தகைய கண்ணோட்டங்களை கவனிக்கும்போது, காலத்தின் ஆயிரக்கணக்கான தந்திரங்களை எதிர்த்து, இந்தியா நிலைத்து, தன்னை நிரூபித்திருப்பது, ஒரு ஏதேச்சையான காரணமற்ற செயல் அல்ல என்பது தெளிவாகிறது. தன்னை உணர்ந்த குருமார்கள், ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த மண்ணை புனிதப்படுத்தியிருக்கிறார்கள்.”

”கடவுள் நம் தேசத்தில் உள்ளார்” என்னும் செய்தி உண்மையாகவே, இந்தியாவுடன் ஒரு தனிப்பட்ட தொடர்பைக் கொண்டுள்ளது. எவ்வாறெனில், இந்தியாவில் பௌதீக உடலிலோ, வேறு விதமாகவோ, அன்பையும், ஞானத்தையும் வெளிப்படுத்தும் ஆன்மீகவாதிகள், எல்லா கால கட்டங்களிலும், மற்ற அனைவரும் அந்த ஒரே இறைவனின் திருவடிகளைப் பற்றி உய்யும் பொருட்டு வாழ்த்து வருகிறார்கள். அவர்களின் அன்பு மற்றும் ஞானமாகிய ஒளியினால், சாமானியர்களும் வழிநடத்தப்படுகிறார்கள். இந்த சாமானியனின், இந்த நூலே மேற்கூறிய உண்மைக்குச் சான்று. இறைவனை உணர்ந்தவன், இறைவனாகவே ஆகிறான்.

இறைவன் நமது தேசத்தில், அதாவது இந்தியாவில் இருக்கிறார் என்று சொல்வது ஒருவிதத்தில் மெய்யே ஆகும். எவ்வாறு எனில், இறைவனை உணர்ந்தவர்களின் ஆசீர்வாதங்களையும், விழிப்புணர்வு நிலையையும், வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தக்கூடிய அருள்செறிந்த பிரதேசங்களை இந்தியா தன்னுள் பெற்று, இந்த மொத்த மனித சமூகமும், மற்ற ஜீவராசிகளும், காலம் மற்றும் வெளி ஆகிய எல்லைகளற்ற பெருங்கடலில் அலைக்கழிக்கப்படாமல், சமநிலையுடன் நின்று உய்ய வழிகாட்டுகிறது.

இந்தியாவைக் குறித்து உலகத்தின் சில பிரபலங்கள் கூறியவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

“என்னை யாராவது எந்த வானத்தின் கீழ், மனித மனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட சன்மானங்களை முழுமையாக வளர்த்துள்ளது, இந்த வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்களை உச்சகட்ட ஆழத்துடன் சிந்தித்துள்ளது, அவற்றுக்கான தீர்வுகளையும் கண்டுள்ளது என்று கேட்டால், நான் இந்தியாவை சுட்டிக்காட்டியாக வேண்டும்”. – மேக்ஸ் முல்லர் (ஜெர்மானிய அறிஞர், 1823-1900)

”சமயத்தைப் பொறுத்தவரையில் இந்தியாதான் ஒரே கோடீசுவரன். இந்த ஒரு தேசம்தான், அனைவரும் பார்க்க விரும்புவது. யாரொருவர் இத்தேசத்தை ஒரே ஒரு தடவை, ஒரு நொடிப் பொழுதாகினும் காண்கின்றனரோ (ஆன்மீக கண்ணோட்டத்தில்), அவர் இதர உலகத்தின் ஒட்டுமொத்தக் காட்சிகளுக்காக (இந்தியாவின்) அந்த ஒரு நொடிக் காட்சியை விட்டுக் கொடுக்க மாட்டார்”. – மார்க் ட்வைன் (அமெரிக்க எழுத்தாளர், 1835-1910)

”இது தெளிவாகிக் கொண்டு வருகிறது. அதாவது, எந்த ஒரு அத்தியாயம் மேற்கத்திய ஆரம்பத்தைப் பெற்றுள்ளதோ, அது தாங்களே தங்களை அழித்துக்கொள்ளும் மனித சமுதாயத்தை முடிவாகக் கொள்ளக்கூடாது என்றால், அது இந்திய முடிவை (ஆத்ம பலம் மற்றும் அனைவரும் ஆத்ம ஸ்வரூபங்களே என்னும் ஆத்மஞானம்) பெற்றிருக்க வேண்டும். இந்த உச்சகட்ட அபாயகரமான சூழ்நிலையில் (அது உலகப்போர்கள் நடைபெற்ற சமயம்) மனிதன் உய்ய ஒரே வழி, இந்திய வழிதான்.” – டாக்டர் அர்னால்ட் டொய்ன்பீ (பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர், 1889-1975)

”மனிதன் தன் இருப்பை கனவு காண ஆரம்பித்த நாட்களிலிருந்தே, வாழும் அனைத்து மனிதர்களின் கனவுகளும் அடங்கி இருக்கும் ஒரு இடம், இந்த உலகத்தின் முகப்பில் இருக்கிறது என்றால், அது இந்தியாதான்.” – ரொமைன் ரேபிலண்ட் (பிரெஞ்சு தத்துவ ஞானி, 1886-1994)

”நான் இந்தியாவில் எல்லோரையும் போல மரணிக்கக்கூடிய ஒரு சமுதாயத்தைக் கண்டேன்; ஆனால், அவர்கள் மரணத்தை ஏற்றுக்கொள்பவர்களாக இல்லை. (நான் அங்கு) நகரத்தில் வாழ்பவர்களைக் கண்டேன்; ஆனால், அவர்கள் அந்நகரங்களோடு ஒன்றி விடுபவர்களாக இல்லை. (நான் அங்கு) அனைத்தையும் தம் வசம் உடையவர்களைக் கண்டேன். ஆனால், எதுவும் அவர்களை வசப்படுத்துவதாக இல்லை.” – அப்போலினியஸ் டையானியஸ் (கிரேக்க யாத்திரிகர், முதலாம் நூற்றாண்டு, CE)

”இந்த ஒட்டுமொத்த உலகத்தின் அனைத்து ஆரம்பங்களும் இந்தியாவில்தான் நிகழ்ந்தன. இந்தியா முதல் நாகரிகத்தைப் பெற்றிருந்தது. இந்தியா பொருள் செல்வத்தைச் சேமிப்பதில் முதலாவதாக இருந்தது. ஆழமான சிந்தனைவாதிகளையும், நுட்ப ஞானிகளையும் பெற்று அந்நாடு பெருமையுடன் திகழ்ந்தது. அந்நாடு சிகரங்களையும், மரவளங்களையும், ஒரு பழுத்த ஆன்மாவையும் பெற்றிருந்தது… என்னுடைய பாரபட்சமற்ற பகுத்தாயும் அறிவுக்கு எட்டிய வரையில், சூரியன் தன் சுற்றுப்பாதையில் காணும் நாடுகளிலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு, அங்குள்ள மனிதர்களோ, இயற்கையோ தவறவில்லை. அங்கு செய்ய வேண்டியவற்றுள் எதுவும் மறக்கப்படவில்லை; குறைத்து மதிப்பிடப்படவும் இல்லை.” – மார்க் ட்வைன்.

”இந்த நூற்றாண்டின் முடிவில், உலகம் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கும். ஆனால், 21ஆம் நூற்றாண்டில், இந்தியா தன்னிடம் ஆதிக்கம் செலுத்தியவர்களை ஆதிக்கம் செலுத்தும்.” – டாக்டர் அர்னால்ட் டொய்ன்பீ (பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர், 1889-1975)

ஆம். இந்தியா இந்த உலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் – ஆயுதங்களால் அல்ல. அன்பாலும், சகோதரத்துவத்தாலும். இந்தியா, இந்த பௌதீக உலகில் ஆதிக்கம் செலுத்துவதற்காக இங்கு இல்லை; ஒவ்வொருவரும் தன்னை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்த உலகத்தாருக்கு கற்றுக் கொடுக்கவே இந்தியா இங்கு உள்ளது.

இந்த புத்தகத்தின் நோக்கம் தெளிவாக உள்ளது. ‘ஒவ்வொருவருடைய இறைத்தன்மையை நினைவூட்டுதற்காகவும்’, ‘அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும் உள்ள இந்த தேசத்தின் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தையும், சமயக் கோட்பாடுகளையும் தெரிந்துகொண்டு கடைப்பிடிக்க தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வாய்ப்பையும், பொறுப்பையும் இத்தேச மக்களுக்கு நினைவூட்டுதற்காகவும்’ தான் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதற்குப் பொருள், இறைவனைக் காணக்கூடிய ஒரே இடம் இந்தியாதான், என்பதல்ல. இறைவனை உணர்ந்த ஞானிகள் இந்த உலகத்தின் எல்லா பகுதிகளிலும் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மனித வாழ்வின் முடிவான நோக்கம், மிகத் தெளிவாகவும், உயிரோட்டத்துடனும் திகழ்கிறது. இதற்குக் காரணம், இந்த தேசம் முழுவதும் பரந்துள்ள ஆன்மீக அதிர்வலைகளின் வலுவான தூண்டுதலேயாகும். அனைவரும், ஏதாவது ஒரு வகையில் இதை உணர்கின்றனர். இந்த ஆன்மீக அதிர்வலைகள், வேற்றுமைகள் கடந்து, இந்த உலகத்தின் அனைத்து தரப்பினருக்காகவும் விளங்குகின்றன.

நாம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை அங்கீகரித்துள்ளோமா? அந்த வாய்ப்பை உரிய முறையில் செயல்படுத்துகிறோமா? விடை எதுவாயினும், இந்த நூல், அதன் விளைவினை மேலும் மேன்மையாக்குவதற்கான தீவிரத்தைப் பெற்றிருக்கிறது.

இது குறித்த என்னுடைய அபிமானங்கள், விளக்கங்கள், வாதங்கள் மற்றும் விசாரணைகள் இந்தியா பேசுகிறது (Thus Spake India), ஒரு கடற்பயணம் (A bon voyage) முதலான தலைப்புகளில் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. இவையனைத்துமே பொதுவான ஆன்மீகத்துக்கும், இந்தியாவின் தனித்தன்மைக்கும் துணை நிற்பனவாய் அமைந்துள்ளன. இவ்விரண்டிற்கும் பெரிதாக ஏதும் வேறுபாடில்லை. ஆன்மீகமே, இந்தியாவின் தனித்தன்மையாகும்.

இந்த நூல்கள் அனைத்தும், தனி நபர்களுக்கான, சமுதாயத்துக்கான மற்றும் அரசியல் அமைப்புகளுக்கான பொறுப்புகளை, பாத்திரங்களைப் பற்றி கூறுவதாக அமைந்துள்ளன. ஆள்பவர்கள், அரசாள்வதுடன், நமது கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். பொழுதுபோக்கு ஊடகங்களை கட்டுப்படுத்துதல், தரமான நன்னடத்தைகளை போதிக்கும் கல்வி முறையைக் கொண்டு வருதல், உண்மையான மதச்சார்பின்மையை நிலைநாட்டுதல் முதலான அம்சங்களை அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டும். இந்த சமுதாயம், குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்கள் – நமது தொன்மையான கலாச்சாரத்திற்கு உயிரூட்டுவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. தொழில் அமைப்புகள், சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்காத வண்ணம், இயற்கையின் சமநிலையைச் சிதைக்காத வண்ணம் தங்கள் தொழிலை நடத்த வேண்டும்.

இவையனைத்தையும் பரிசளித்தல், கௌரவித்தல் முதலான நேரிடையான செயல்கள் மூலமாகவும், தண்டனையளித்தல் முதலான எதிர்மறையான செயல்கள் மூலமாகவும் நடைமுறைப்படுத்த ஆள்பவர்கள் முனைய வேண்டும்.

நாட்டுப்பற்று என்பது, ஒரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மட்டுமோ அல்லது பாதகமான சூழ்நிலைகளின்போது மட்டுமோ வருவது அல்ல. கலாச்சாரம், சமயம், புனிதத்தன்மை முதலான ஒரு நாட்டின் தனித்துவத்தை காப்பதற்கான அனைத்து விஷயங்களிலும் தேசப்பற்று இருக்க வேண்டும். தேசப்பற்று, சில குறிப்பிட்ட நாட்களில் ஆணவத்துடன் கொண்டாடப்படும் வெற்று விழாக்களில் வெளிப்படுவது இல்லை. நாட்டின் உயிரோட்டமான கோட்பாடுகளை, அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் கடைபிடிப்பவர்கள் மூலமாகத்தான் தேசப்பற்று என்பது மேன்மையுடன் வெளிப்படுகிறது. இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடு ஆத்ம விடுதலையே ஆகும். உண்மையான தேசப்பற்று உள்ளவன், அதற்காக போராடுகிறான். அவன் உண்மை அல்லது ஆத்மாவுக்காக வாழ்கிறான். உண்மை அல்லது ஆத்மாவை தளைப்படுத்துவது எதுவாயிருந்தாலும் அதை எதிர்த்து நிற்கிறான்.