"God is in Our Land"

கடவுளை எப்படிக் காண்பது?

கடவுளை எப்படிக் காண்பது?

 

வேதாந்தத்தின்படி, கடவுளைக் காணக்கூடிய கண்கள் இரண்டு. ஒன்று பிரேமஸாக்ஷீ அதாவது அன்புக்கண், இன்னொன்று ஞானஸாக்ஷீ அதாவது ஞானக்கண். அன்புக்கண் ஆத்மஞானத்தைக் காட்டுகிறது. ஞானக்கண் இயல்பாகவே அன்பாக ஒளிர்கிறது. கடவுளிடம் அன்பு, ஆத்ம ஞானம் இவையிரண்டுமே இறைவனை உணர்த்துகின்றன. இவையல்லாது, இறைவனை உணர்தல் அல்லது காணுதல் என்பது இயலாத செயல். எனவே பிரம்மானுபவ உபநிடதம் “ஞானக்கண் அல்லது அன்புக்கண், இறைவனைக் காணத் தேவைப்படுகிறது“ என்று சொல்கிறது.

கடவுளிடம் அன்பு என்பது, எல்லா உயிர்களிடத்தும் பரவி நிற்கும் இறைவனிடம் – அதாவது அனைத்து உயிர்களிடமும் – செலுத்தும் அன்பு ஆகும். ஆத்ம ஞானம் என்பது, உல்லா உயிர்களிடத்தும் இரண்டறக் கலந்து, தன்னுள்ளும் அவ்வாறே ஒளிவீசிக் கொண்டிருக்கும் ஆத்மனை உணர்தல் ஆகும்.

ஞானப்பாதை, அன்புப்பாதை இவை இரண்டுமே உள்முகமானவை. நமது தேடலும் உள்முகமானது. இவ்வாறு இருக்கும்போது, நாம் ஏன் கோயில்களுக்கும், சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும், குருத்வார்களுக்கும், தர்மசாலாக்களுக்கும், இன்னபிற மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த இடங்களுக்கும் செல்லவேண்டும்? நம்முடைய இயல்பான அமைதி மற்றும் ஆனந்தம் ஆகியவை, நம்முடைய தவறான போக்கினால் விளையும் துன்பங்கள் மற்றும் பயங்கள் முதலான புழுதிகளால் மூடப்பட்டுவிடுகின்றன. அத்தகைய தருணங்களில், நாம் அமைதியையும், ஆறுதலையும் வெளி இடங்களில் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை. இத்தகு திவ்ய தேசங்களை நாம் இதயபூர்வமாக அணுகும்பட்சத்தில், அங்கு தடையின்றி வெளிப்பட்டுக் கொண்டு இருக்கும் ஞான மற்றும் அன்பு ஊற்றுக்கள், நம் உள் இயல்பை தூய்மையாக்குவதாய் அமைகின்றன. இந்த மாற்றங்களை நாம் பிரத்யக்ஷ்மாக எல்லா தருணங்களிலும் உணருகிறேம் என்று சொல்வதற்கில்லை. ஏனெனில், இந்த நுட்பமான உள் விளைவுகள் நுட்பமாகவே நிகழ்கின்றன.

உள்முகமாக விழித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் இந்த வெளிப்புற உதவிகளும் கிட்டுகின்றன. ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு தோத்திரம்: “அந்தர்முக சமாராத்யா, பஹிர்முக சதுர்லப“ இதன் பொருள், உள்முகமான சாதனைகளால் இறைவனை எளிதில் உணரலாம். வெளிப்புற தேடல்கள் மிகவும் அரிதாகவே உதவுகின்றன. இந்த வரி, ஒரு எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்துவது போல் தோற்றம் அளிக்கிறது. ஆன்மீக நாட்டம் அல்லது இறை நாட்டம் இல்லாத குருடர்களுக்கு வெளிப்புற சடங்குகளாலோ, பூசைகளாலோ, யாதொரு பயனுமில்லை. இறையுணர்வு என்னும் விளக்கை, அவர்கள் ஏற்றாமல் இருப்பதால் வெளிப்புறத்தில் பிரதிபலிக்கும் தெய்வீகத்தை அவர்கள் உணர்வதே இல்லை. ஞான ஒளி பெற்றோர், எல்லா இடங்களிலும் இறைவனையே காண்கின்றனர். அந்த ஒளி கிடைக்கப்பெறாதவர்கள், கடவுள் நேரெதிரில் நின்றாலும், அவரைக் காண்பதில்லை. இதனால்தான் வெளிமுகமான ஆன்மீக தேடுதலைக் குறித்து நாம் மாறுபட்ட அனுபவங்களையும், கருத்துக்களையும் பெற்றுள்ளோம். உள்ளொளி பெறாதவர்கள், எதையுமே உணர்வதில்லை. சிறிதளவு ஒளி பெற்றவர்கள், அதற்கேற்றார்போல் காண்கின்றனர். சூரியனைப்போல் ஜொலிப்பவர்கள் அனைத்தையும் மிகத்தெளிவாக காண்கின்றனர்- மற்றவர்கள் காண்பதற்கும் வழிகாட்டுகின்றனர். அதனால்தான் காந்திஜி இவ்வாறு கூறினார்: ‘ஒருவனுடைய உள்ளொளியின் பிரகாசத்தைப் பொறுத்தே, அவன் இறைவனைக் காண்பதும் அமைந்திருக்கும்’. எனவே, நாமனைவரும் நம் உள் ஒளியைப் பெருக்கிக் கொள்ள அனைத்து வழிகளிலும் முயலவேண்டும். வெளிப்புற வழிபாடுகள், உள்முக வழிபாட்டை ஊக்குவிப்பவையாக இருக்க வேண்டும். வெளிப்புற வழிபாட்டின் உன்னதமான அனுபவங்கள், உள்முகமான தேடலுக்கு சாதனங்களாக மாற்றப்படாதவரை, வெளிப்புற வழிபாடுகளால் பயன் ஏதும் இல்லை.

இந்த புத்தகத்தில், திருவண்ணாமலை ஜோதி படமும், உள்ளொளி பெற்ற ஒரு யோகியின் படமும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின்கீழே இருபுறங்களிலும், இரண்டு விளக்குகள் உள்ளன. இந்த அட்டைப்படம் வெளிப்படுத்தும் உண்மை: திருவண்ணாமலை ஜோதியின் வல்லமை மற்றும் மேன்மை, உள்ளொளி பெற்ற ஒருவருக்கே விளங்கும். உள்ளொளி பெறாமல் புற ஒளியில் தெய்வீகத்தை உணர்வது என்பது அரிது. இந்த உள் ஒளியை ஞானமாகிய விளக்கும், அன்பாகிய விளக்கும் தூண்டுகின்றன.

“இந்த உடலே இறைவன் உறையும் ஆலயமாகும். உள்ளிருக்கும் ஜீவனே, ஒப்புயர்வற்ற சிவனாவான். நிர்மால்யத்தை நீக்கி ஸோஹம் (அவனே நான்) என்று தியானியுங்கள்” – மைத்தேரயி உபநிஷத்.

‘கடவுள் நம் தேசத்தில் உள்ளார்’ எனும் செய்தி நம்முள்ளேயே ஊடுருவியிருக்கும் இறையுணர்வையே குறிக்கிறது. இறைத்தன்மையை வெளிப்படுத்தும் இந்த தேசத்துக்குச் செல்ல தூய்மையான மனம் என்னும் விசா வேண்டும். இதன் அடிப்படையில், ஞான மற்றும் அன்பு விமானங்கள் நம்மை அங்கே கொண்டு செல்கின்றன.

ஒரு சாமானியனால் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்படும் அன்பு, ஞானம், சமயம், கடவுள் ஆகிய சொற்கள் எந்த அளவுக்கு ஒன்றுக்கொன்டு தொடர்பு கொண்டுள்ளன என்பதை என்னால் உணர முடிகிறது.

என்னுடைய வலைதளம் ”கடவுள் நம் தேசத்தில் உள்ளார்” எனும் செய்தியைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டது. மனிதர்கள் இயல்பாகவே தெய்வத்தன்மை பொதிந்தவர்கள் எனும் செய்தியை இது பரப்புகிறது.

மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் இந்த உலகில், இந்த பக்கங்கள் அவற்றைப் படிப்பவர்களுடைய பதிலிறுக்கப்படாத ஆத்ம தேடலை, ஆத்ம தாகத்தை தூண்டிவிடும் என்று நம்புகிறேன்.

கடவுள் நம்முள்ளேயே ஆத்ம ரூபத்தில் இருக்கிறார் எனும் இந்தச் செய்தி நறுமணம் போல ஆடம்பரம் இல்லாமல், சத்தம் இல்லாமல் பரப்பப்படும். இந்த செய்தி, வெளியுலகில் பரப்பப்பட்டால்தான், அதை ஊன்றி கேட்பவர்கள் அதை தங்களின் உள்ளே கிரகித்து உணருவதற்கான, பரப்புவதற்கான வாய்ப்புகள் அமையும். இந்த இருவகை செய்திப் பரப்புதல்களும் நிகழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.