"God is in Our Land"

சமயங்களின் நோக்கம்

சமயங்களின் நோக்கம்:

 

கடவுளைப் பற்றி வரையறுத்து விளக்கமுற்படுவோர்களுக்காக ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார்: நான்கு குருடர்கள் ஒரு யானையின் தோற்றத்தைப் பற்றி அறிய முற்பட்டார்கள். அவர்களுள் ஒருவன், யானையின் காலைத் தொட்டுவிட்டு, அது ஒரு தூண் போன்றதாய் இருக்கும் என்னும் முடிவுக்கு வந்தான். இன்னொருவன் யானையின் வாலைப்பிடித்துப் பார்த்துவிட்டு, ”யானை என்பது ஒரு கயிறுபோன்றது” என்றான். மூன்றாமவன் அதன் காதைத் தடவிப்பார்த்து, ”யானை முறம் வடிவத்தில் இருக்கும்” என்று முன்மொழிந்தான். நான்காமவன், யானையின் வயிற்றைத்தொட்டுவிட்டு தன் நண்பர்களிடம் சொன்னான்: ”முட்டாள்களே, யானை ஒரு பெரியபானை வடிவத்தில் உள்ளது”.

இறைவனை வரையறுத்து விளக்க முற்படுவோர்களின் கதையும் இதுதான். ஏனென்றால், கடவுள் வாய் விளக்கத்துக்கு உட்பட்டவர் அல்லர்; அவர் அனுபவ உணர்வுக்கு உட்பட்டவர். குருடர்கள் கூறியதில் ஓரளவு உண்மையிருந்தாலும், அவர்கள் எல்லையில்லாத் தன்மையின் ஒரு பகுதியையே அறிந்திருக்கிறார்கள்.

எனவே, எல்லையில்லா இறைவனுக்கு எல்லைகள் கொடுத்து வரையறுப்பது என்பது முட்டாள்தனமான செயலாகும். அது, குருடன் ஒரு பொருளை வரையறுத்துக் கூறுவதற்கு ஒப்பாகும். உள் அனுபவம் என்னும் கண்ணே இறைவனைக் காண உதவும். இவ்வாறு காணப் பெற்றவர்கள், தாம் அடைய நினைத்த பொருள், தாம் காண முற்பட்ட அந்த யானை, தாமே தான் என்பதை ஆத்மார்த்தமாய் உணருகிறார்கள். கடவுள் நம்முள்ளேயே உள்ளார்.

இன்னொருவருடைய கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி கூறக்கூடிய பண்டிதர்கள் இருக்கிறார்கள். அசாதாரண சக்தியைப் பெற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், உண்மையான சாதனை ஆத்மஞானமேயாகும். பகவான் ரமணர் சொல்லுவதைப் போல, எதிர் காலத்தைப் பற்றி கூறுவது, இன்னொருவர் நினைப்பதை அப்படியே கூறுவது முதலானவை ஆத்ம ஞானம் ஆகாது. தான் தன்னையறிதலே ஆத்மஞானம். ஆத்மாவை உணர்தல் என்பது உண்மையில் இறைவனை உணர்தலேயாகும்.

ஆதிசங்கரர், இறைவனுக்குரிய அதே அடையாளங்களை அல்லது அம்சங்களை பெற்றுள்ளதே ஆத்மாவாகும் என்கிறார். (உண்மையில் இங்கே இரண்டு விஷயங்கள் இல்லை. இருப்பது ஒன்றேதான்.) இறைஞானம், ஆத்மஞானம் அன்றி விளையாது. ஒருவன் ஆத்ம ஞானம் பெற்றவன் என்றால், அவன் இறையனுபூதியும் உடையவன் என்பது தெள்ளத்தெளிவு.

நாம் பௌதீக உலகில் உள்ள தேசங்களின் எல்லைகளைக் காப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறோம். ஆசை, ஆணவம், பொறாமை முதலான எதிரிகளை நம்முள்ளே இருக்கும் தேசத்தில் உலவவிட்டுவிட்டு வெளியில் சண்டை போடுகிறோம். நாம் எப்பொழுது, நமது பௌதீக தேசங்களைக் காப்பதற்காக வெளிப்படுத்தும் அதே ஆக்ரோஷத்தையும், துணிவையும், உள்முக எதிரிகளை விரட்டியடிப்பதற்காக தூண்டுகிறோமோ, அப்பொழுதுதான், கடவுள் நம்முள் உள்ளார் என்னும் உண்மையை உணர்வோம். நாம் நமது உள்முக எதிரிகளை விரட்டியடிக்க முற்படும்போது மற்றவர்களுடைய உள் எல்லைகளைக் காயப்படுத்தி விடக்கூடாது. கடவுள் எல்லோர் இதயங்களிலும் உள்ளார்; அவர் எங்கும் நிறைந்தவர். வெளிச்சூழ்நிலை, உள் சூழ்நிலை இரண்டிலும் கடவுள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: ”இந்த உலகமும், நாமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவர்கள் அல்ல. இந்த பிரபஞ்சத்திற்கும், தனக்கும் இடையே ஒரு சிறு வேறுபாட்டையும் காண்பவன், நரகத்தை உணர்வான். முன்னேறிச் செல்வாயாக. எவ்வாறாகினும், நீ இறைவனை உணர்வாய். ஆனால் போகும்போது, யாரையும் கீழே தள்ளிவிட்டு போகாதே.” கீழே தள்ளி விடுதல் என்பது ஒருவருடைய உடலையோ, மனதையோ புண்படுத்துவதை மட்டும் குறிப்பிடவில்லை; அது ஒருவருடைய ஆத்ம விழிப்புணர்வுக்கான வழியில் இடையூறு செய்வதையே பிரதானமாக குறிப்பிடுகிறது.

மூன்று விஷயங்கள் அடைதற்கு அறியவை என ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார். 1. மனித பிறவி, 2. ஆத்மஞானத்தில் விருப்பம், 3. சத்குருவின் வழிகாட்டல். இரண்டாவது அறிய விஷயமான ஆத்ம ஞானத்தில் விருப்பம் ஏற்பட்டவர்கள், மூன்றாவது அரிய விஷயமான சத்குருவின் வழிகாட்டுதலுக்காக மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். நாம், அத்தகைய சில குருமார்களையும், அவர்களுடைய ஈடில்லா வழிகாட்டுதல்களையும் பெற்றுள்ளோம். சத்குரு என்பவர் இறைவனே ஆவார். ஆகவே உருவத்தில் வேண்டுமானால், சத்குரு பல பேராகத் தெரியலாம். உண்மையில் சத்குரு ஒருவரே. ஒரே செய்தி பல மொழிகள் வாயிலாகச் சொல்லப்படலாம். வார்த்தைகள் மாறலாம். உச்சரிப்பு மாறலாம்; வாக்கிய அமைப்புகள் மாறலாம். ஆனால் இவர்கள் அனைவரும் சொல்ல முற்படும் செய்தி ஒன்றே ஆகும். உண்மையான குரு அனைவருக்கும் பொதுவாகவே உள்ளார்; பிரித்தாராய்ந்து பகுத்துணரும் திறன் வடிவில் நம்முள்ளேயே உள்ளார். அவர், ஒருவருடைய ஆத்மாவைச் சுற்றி மூடியிருக்கும் மாயத்திரைகளை அகற்றுகிறார். அன்பு மற்றும் ஞானம் ஆகிய கண்களைத் திறக்கிறார். ஒருவருடைய தகுதிக்கும், தன்மைக்கும் ஏற்றார்போல், அவர் உரிய வழியைக் காண்பிக்கிறார். ஆன்மீக வழிகள் (அ) சாதனைகள் அனைத்தும் மூன்று விதமான தடைகளை நீக்குவதற்காக அமைந்திருக்கின்றன.

அவை: மாயையின் ஆதிக்கம், கர்ம வினைகளின் தாக்கம், இவற்றிற்கிடையே உடலும் மனது. ஆத்ம சாதகத்தில் அடையும் உணர்வு நிலை அவரவருடைய ஆன்ம ஞானத்துக்கான தாகத்தைப் பொறுத்தும், ஆத்ம சாதனைகளின் தீவிரத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. ஒருவர் தான், கடவுளின் தேசத்தில் வாழ்வதாக உணர்கிறார். இது சாலோகம் எனப்படுகிறது. ஒருவர் தான், கடவுளின் தேசத்தில், கடவுளுக்கு அருகாமையிலேயே இருப்பதாக உணர்கிறார். இது சாமீப நிலையாகும். இன்னொருவர் தான், கடவுளின் தேசத்தில் கடவுளுக்குரிய தகுதிகளோடு இருப்பதாக உணர்கிறார். இது சாரூப நிலை எனக் கூறப்படுதிறது. மற்றுமொருவர் தான், கடவுளின் தேசத்தில், தன்னுடைய தேசத்தில், கடவுளாகவே இருப்பதாக உணர்கிறார். இதுவே, சாயுஜ்ய நிலையாகும். இவ்வாறாக நாம் அனைவருமே கடவுளின் தேசத்தில் உள்ளோம். இதை இப்படியும் சொல்லலாம். கடவுள் நம் தேசத்தில் உள்ளார். நாம் எந்த அளவுக்கு அவரை உணர்ந்திருக்கிறோம் என்பது நமது ஆத்ம தாகத்தையும், முயற்சிகளையும் பொறுத்தது. தீவிர சாதனையில், இறை சிந்தனையில் ஈடுபடுபவர்கள், இறைவனின் அருகாமையைப் பெற்று வாழ்வின் மர்மத்தை உடைத்து விடுகிறார்கள். இறையுணர்வில் விருப்பமில்லாதவர்கள், அறியாமை என்னும் இருளில், நீர்க்குமிழிகளாக வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மையமும் ஒளிமயமானதுதான். ஆனால், அவர்கள் தங்கள் அறியாமையினால் அதனின்றும் தூர விலகி இருக்கிறார்கள்.

அத்வைத தத்துவம் சொல்வது இதைத்தான்: தேசமும், கடவுளும் வேறு அல்ல; இந்த உலகமும், அதைப் படைத்தவனும், வேறு வேறு அல்ல. இரண்டு எனபது இல்லை. இருப்பது ஒன்றேயாகும். அது இறைவனே. அடிப்படையில், நாம் அனைவரும் ஒருவரே. நம்மைப் பற்றிய இந்த அடிப்படை உண்மையை உணரும் பொருட்டு ஒவ்வொருவரும் பிரயத்தனப்படுகிறோம். நம் அடிப்படையில் இருந்து நாம் வெகுதூரம் விலகி நிற்கிறோம். இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறோம்.

இறைவன் எல்லோருள்ளும் இருக்கிறார். பல வடிவங்களில் பிரதிபலித்தாலும், எங்கும் நிறைந்துள்ள இறைத்தன்மை ஒன்றேயாகும். அப்படி இருந்தும், இறைவனுக்கும் நமக்கும் இடையே ஒரு இடைவெளியை உணருகிறோம். இருப்பதுபோல் தோன்றும் இந்த இடைவெளியை எப்படி அகற்றுவது? எப்படி இறைவனை அடைவது? அதற்குத்தான் சமயங்கள் உள்ளன. சமயங்கள் மனிதனுக்கும் இறைவனுக்குமான உணர்வுப் பாலத்தை வலிமையாக்குகின்றன.

சில மார்க்கங்கள் இந்த இணைப்பை, இறைவனிடம் அடிபணிதல் என்று கூறுகின்றன; சில சமயங்கள் இறைவனிடம் அன்பு செலுத்துதல் என்று சொல்கின்றன. சில சமயங்கள் இறைவனுடன் ஒன்றறக் கலத்தல் என்று குறிப்பிடுகின்றன. சில சமயங்கள் இறைவனைப் பற்றி எதுவும் பேசாமல், இறைத்தன்மைக்குரிய மார்க்கத்தைப் பற்றி மட்டும் பேசுகின்றன. என்னுடைய சமயம், இறைவனுடன் ஒன்றறக் கலந்து இறைவனாகவே இருக்கும் உணர்வைப் பற்றிப் பேசுகிறது. அது நன்கு சோதிக்கப்பட்ட நம்பிக்கைக்குரிய பாதைகளைக் கொண்டுள்ளது. ஒரு பாதை உழைப்பாளனுக்கு, அதாவது பிரதிபலனைப் பற்றி கவலைப் படாமல், உலக நலனுக்காக உழைக்கவேண்டும் என்று எண்ணுபவனுக்கு. இன்னொரு பாதை. விளக்கங்களையோ, தத்துவங்களையோ பற்றி கவலைப்படாமல் அனைத்தின் மீதும் அன்பு செலுத்தும் நுட்பமான இதயம் கொண்டவனுக்கு. மூன்றாவது பாதை தத்துவ ஞானிக்கானது. நான்காவது பாதை, மிருக உணர்ச்சிகளையும், மனித உணர்ச்சிகளையும் சுய முயற்சியால் வென்று இறைத்தன்மையில் நிலைபெறத் துடிக்கும் யோகிக்கானது. இந்த நான்கு பாதைகளிலுமே ஒவ்வொருவரும் வெவ்வேறு விகிதங்களில் பயணிக்கின்றனர். ஆனால், இப்பாதைகளின் இறுதியான எல்லைகள் ஒன்றேயாகும். அந்த எல்லை நம்முள்ளேயே மறைந்து இருக்கிறது. சொல்லப்போனால், நாம்தான் அந்த எல்லையினின்றும் விலகி மறைந்து உள்ளோம். நமது உண்மையான இயல்பை யார் தான் உணர்த்துவது? கடவுள்தான். அவர் ஒரு சத்குருவாக அதாவது தன் இயல்பை உணர்ந்த ஒருவர் வடிவத்தில், வந்து நம் இயல்பை நாம் அறியும் பொருட்டு உதவி புரிகிறார்.

ஒரு சமய மார்க்கத்தின் அடிப்படை கட்டாயம் யாதெனில், அது தன்னையறிந்த அல்லது இறையனுபூதி பெற்ற ஒருவரை ஆரம்ப கர்த்தாவாகப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அது அழிவது உறுதி. உதாரணமாக, அக்பரின் தீன் இலாஹி என்னும் மதத்தைக் குறிப்பிலாம். அரசரான அக்பர், தன் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முனைந்திருக்கலாம். ஆனால், அவர் ஆத்ம ஞானியோ அல்லது இறையனுபூதி பெற்றவரோ அல்லர். அதனால் அவருடைய கொள்கைகள், அவருக்குப் பின் நிலைக்கவில்லை.

எந்த உண்மையான சமயமும், மேலே குறிப்பிடப்பட்ட நான்கு பாதைகளைப் பற்றியதாகவே இருக்கும். நாம் ஏற்கனவே முன் அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல, கள்ளப்புலன்களை வென்று, மனதைக் கட்டுக்குள் கொண்டு வருவதே சமயங்களின் பொதுவான நோக்கமாகும். ஒரு செயலற்ற நிலையை இது குறிக்கவில்லை. உடல்ரீதியான புலன்களுக்கான வாசல்களைப் பொத்திக்கொள்வதை இது குறிக்கவில்லை. ஒருவர் முழு இதயத்துடனும், திறனுடனும் ஒரு நல்ல காரணத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செயல்படலாம். ஆனால், அவர் உடல் மற்றும் மனம் கடந்த உணர்வு நிலையில் இருக்க வேண்டும். நாம் இந்த உடலையும், மனதையும் விட மேம்பட்டவர்கள் என்பதை உணர, தீவிரமாக முயற்சிக்க வேண்டும். மனம் செம்மையாகும்போது அது நிகழும்.

”மனமது செம்மையானால்” எனத் தொடங்கும் பாடலின் பொருள்: மனம் செம்மையாகிவிட்டால் மந்திர உச்சாடனம் தேவையில்லை; மனம் செம்மையாகிவிட்டால் குண்டலினியை மேலே எழுப்பும் யோகப் பயிற்சி செய்ய வேண்டியதில்லை. மனம் செம்மையாகிவிட்டபிறகு, எந்த வினையையும் செய்யவேண்டியதில்லை. இதற்கு எதிர்மறையான ஒரு பொருளும் உண்டு. மனம் செம்மையாகும் வரை, மந்திர உச்சாடனம் செய்து கொண்டிரு. மனம் செம்மையாகும் வரை, குண்டலினியை மேலேழுப்பும் யோகப் பயிற்சிகள் மேற்கொள். மனம் செம்மையாகும் வரை, பிரதிபலன் எதிர்பாராமல் சத்கர்மங்கள் செய்துவா. ஏதாவது ஒரு வழியில், உன்னுடைய மனதை செம்மையாக்க முயற்சி செய்துவா. இந்த ஆன்மீக முயற்சியே சாதனை எனப்படுகிறது. எண்ணெய்ப் பாத்திரம் நிரம்பி வழியும்போது, அதில் மேலும் எண்ணெய் ஊற்ற வேண்டியதில்லை. நிரம்பிய பாத்திரம் நிரம்பியவாறு இருக்குமாறு பார்த்துக்கொண்டால் போதும். ஆனால் பாத்திரம் நிரம்புவது என்பது மாயாஜாலங்களால் நிகழாது. ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரத்தை, அவரவர் முயற்சிகளாலேயே நிரப்ப வேண்டும். உலகின் அனைத்து ஆத்மஞானிகளும், இந்த நிரப்புதலை பல பிறவிகளில் செய்து வந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சாமானியர்கள் வரும்போதே, தங்கள் பாத்திரங்களில் – காமம், பேராசை, இயல்புக்கு வேறான குணங்கள் முதலான ஓட்டைகளுடன் வருகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் பாத்திரங்களை நிரப்ப எவ்வளவுதான் முயற்சித்தாலும், ஏதாவது ஒரு ஓட்டை வழியாக அவர்களுடைய முயற்சிகள் வீணடிக்கப்படுகின்றன. பாத்திரங்கள் காலியாகவே இருக்கின்றன. அவர்கள் நம்பிக்கையுடன் தங்களது முயற்சிகளைத் தீவிரப்படுத்தும்போது, கடவுள் அவர்களுக்கு உதவுகிறார். கடவுளின் அருளால், அவர்களது பாத்திரம் நிரம்பி, அவர்களுடைய சாதனைகள் பயன்பெறுகின்றன.

இதே கருத்து வேறுமுறையிலும் சொல்லப்படுகிறது. பல குப்பைகளைக் கொண்டுள்ள உன்னுடைய பாத்திரத்தை, ஆன்மீக சாதனைகள் மூலம் காலி செய்வாயாக. ஒருவர் எவ்வளவுதான் முயற்சித்தாலும், காமம், பேராசை போன்ற குப்பைகள் பாத்திரத்தில் விழுந்த வண்ணம் உள்ளன. அந்த பாத்திரத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய தீவிர முயற்சியும், அதற்கும் மேலாக இறையருளும் வேண்டும். இறைவனின் அருளால் மட்டுமே இறையனுபூதியைப் பெற முடியும். தமக்குத்தாமே முயற்சி செய்பவர்களுக்கு இறைவன் உதவி புரிகிறார். இரு கைகளையும் மேலெழுப்பி, இறைவனை நோக்கி அபயம் வேண்டி நிற்பவர்களை அவர், மேலே எற்றி விடுகிறார். இவ்வாறாக சமயத்தின் முக்கிய நோக்கம் யாதெனில், ஆத்ம சாதனைகள் புரிந்து, மனதைச் செம்மைப்படுத்துவதன் மூலமாக, இறையருளுக்குப் பாத்திரராகி. தன்னுடைய உண்மை நிலையை, ஆத்ம ஒளியை தன்னுள்ளேயே உணருவதேயாகும். மனித வாழ்வின் நோக்கமும் இதுவேயாகும்.

மனம் செம்மையாவது அல்லது சுத்தமாவது என்பது பல விதங்களில் நடக்கிறது. ஒருவர் வினைகளைச் செய்வதன் மூலம் மனதைச் செம்மையாக்கலாம்; மற்றொருவர் எந்த வினைகளையும் செய்யாமலிருப்பதன் மூலம் மனதை செம்மையாக்கலாம். ஒருவர் பக்தி மார்க்கத்தை கடைப்பிடிப்பவராக இருக்கலாம். இன்னொருவர் யோக மார்க்கத்தைக் கைக்கொண்டிருக்கலாம். இவை அனைத்தின் நோக்கம் ஒன்றே. மனம் செம்மையடைய வேண்டும். நாம் தெளிவான மனதைப் பெற்றிருந்து, அதன் வெளிப்புற ஓட்டங்களைத் தடுத்தோமானால், ஆத்ம தரிசனம் என்பது உள்ளே நிகழும். அனைவருமே ஒரு குறிப்பிட்ட பாதையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் வற்புறுத்த முடியாது. ஏனென்றால், நம் இருப்பு நிலையின் அடிப்படை இயல்பே சுதந்திரம் என்பதாகும். நம் விருப்பங்களையும், வழிகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை நாம் அனைவருமே பெற்றுள்ளோம். தவறான செயல்முறை மேற்கொள்ளாமல் அவற்றைத் தவிர்ப்பது என்பது பிறறது வற்புறுத்தலுக்கு அப்பாற்பட்ட நமது இயல்பான கடமையாகும். ஆன்மீக சாதனைகளைப் பற்றி கூறும்போது, மார்ட்டின் லூதர் கிங்-கின் வார்த்தைகளைக் குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும். ”உன்னால் பறக்க முடியாவிட்டால் ஓடு; ஓட முடியாவிட்டால் நட; நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல். நீ என்ன செய்தாலும், முன்னேறிச் சென்றே ஆகவேண்டும்” முன்னேற்றம் என்பது, இங்கே உணர்வுநிலை மாற்றத்தை, தன் இயல்பைத் தானறிந்து கொள்வதைக் குறிக்கிறது.

வெவ்வேறு மார்க்கங்களில் செல்பவர்கள், தாங்கள் செல்லும் பாதை மட்டுமே சரியானது என்று தமக்குத்தாமே முடிவு செய்து கொண்டு, மற்றவர்களுடன் மோதிக் கொள்கின்றனர். சமயம் அல்லது மார்க்கம் என்பது தனிநபர் எல்லைக்குள் இயங்குவது. அது தனி நபர்கள் தங்கள் மனங்களை சுயசுத்திகரிப்பு செய்துகொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது. பிறரை தன் சமய எல்லைக்குள் கொண்டுவர நேரத்தை வீணடிக்காமல், தனக்குரிய வழியில் திடமாக முன்னேறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளவே ஒருவர் முயலவேண்டும்.

தனக்குரிய பாதையில் – அது சேவையாகட்டும், பக்தியாகட்டும், விசாரணையாகட்டும் அல்லது யோகமாகட்டும் – ஒருவர் முயற்சியுடன் ஊன்றி செயல்படாத வரைக்கும், அவருக்கு வேறு எந்த காரணியும் பக்குவத்தை வழங்கிவிடாது. சுய முயற்சி இல்லாமல், வெறும் ஆன்மீக புத்தகங்களை படிப்பதாலோ, பிரசங்கங்களிலும், பெருத்த கூட்டங்களிலும் கலந்து கொள்வதாலோ ஒருவர் பக்குவமடைந்துவிடமாட்டார்.

ஒருவர் உண்மையிலேயே தன்னை மாற்றிக்கொள்ள விரும்பினால், ஒரு புதிய பரிமாணத்திற்குள் செல்ல விரும்பினால், அவர் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள சாவியை, உபயோகிக்கவேண்டும். சாவி அதாவது சமயம் என்பது தனி நபரின் தன்மையைப் பொறுத்தது. சாவியைப் புகழ்ந்து பேசுவதோ அல்லது அதைக் குறை கூறுவதோ எந்த விதத்திலும் உதவாது. ஒருவர் தன்னுடைய தற்போதைய நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஒரு புதிய உன்னதமான உணர்வு நிலைக்குச் செல்ல நினைத்தால், அவர் அந்த சாவியை சரியான முறையில் செலுத்தி இயக்கவேண்டும். அவர் சாவியை உபயோகிக்கவே இல்லை என்றாலோ அல்லது சாவியை தனது அறியாமையாலும், பொறுப்பற்ற தன்மையாலும் சேதப்படுத்திவிட்டாலோ, தவறு அவருடையதே ஆகும், சாவியினுடையது அல்ல. தன்னைத்தானே மாற்றிக்கொள்ள துணிவு இல்லாத ஒருவர் தனக்குரிய சமயத்தைக் குறை கூறுகிறார்; சாவிகளை மாற்றுவது போல் சமயங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார். இறைவன் ஒவ்வொருவரையும் அவரவருக்குரிய மிகப் பொருத்தமான சாவியுடன் இவ்வுலகுக்கு அனுப்புகிறார்.

நமது கர்ம வினைகளையும், நமது ஆத்ம உணர்தலையும் நமக்குண்டான சாவியின் மூலம் செயல்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவர் ஆத்ம ஞானத்தை விரும்பாத வரையில், அதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளாத வரையில், எந்த சமய மார்க்கமும் அவருக்குக் கைகொடுக்க முடியாது. ஒருவர் தன்னையறிதல் அல்லது இறைவனை அறிதல் என்ற விஷயத்தில், தனக்குத்தானே உண்மையாக இல்லாத பட்சத்தில், வெறும் சாவிகளை மாற்றுவதால், அதாவது வெறும் மதமாற்றங்களால் யாதொரு பயனுமில்லை. ஒரு சமய மார்க்கத்திற்கு மாறி விடுவதால் மட்டும் ஒருவர் ஆத்ம ஞானியாக அல்லது இறையனுபூதி பெற்றவராக மாறிவிடமுடியும் என்றால், அந்த மதத்தில் இருக்கும் அனைவருமே ஆத்ம ஞானிகளாக இருக்க வேண்டும். ஆனால், உண்மை என்னவெனில், அஞ்ஞானிகளும், குற்றவாளிகளும் அனைத்து மதங்களிலும் உள்ளனர். எனவே, சோதனை நடத்தப்படுவது ஒருவருடைய சமயத்துக்கு அல்ல – அவர் தன்னறிதலுக்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளின் உண்மைத் தன்மைக்கு. ஒவ்வொரு சமயமும் தனக்கென சில சிறப்புத் தன்மைகளைப் பெற்றுள்ளது. ஒரு சிலருக்கு அவை தேவைப்படலாம், பலனும் தரலாம். அனைவருக்கும் அதே மாதிரியான பலன்களை அந்த சமயம் தரவல்லது என்று கூறமுடியாது. ஏனென்றால் அது அதைச் சார்ந்திருப்பவரின் உண்மைத்தன்மையைப் பொறுத்தது. எல்லா உண்மையான சமயங்களும் தன்னுணர்வு அல்லது இறைஉணர்வு, இவற்றுக்கான வழிகளை போதிப்பதாய் உள்ளன. எந்த ஒரு சமய மார்க்கம் இதைச் செய்யவில்லையோ அது சமயமே அல்ல. இந்தியாவின் சமயங்கள் ஆத்ம ஞானம் அல்லது இறைஞானம் என்னும் பொதுவான நோக்கத்தைப் பெற்று ஆழமான தத்துவங்களையும், நிரூபிக்கபட்ட பாதைகளையும், மாறுபட்டு நிற்கும் மனிதர்களுக்காக தன்னகத்தே கொண்டுள்ளன.

சுவாமி விவேகானந்தர் கூறுவதைப்போல், ”சமயம் என்பது உணர்தல், வெறும் வசீகரமான பேச்சுக்களோ, விளக்கங்களோ, வியாக்கியானங்களோ அல்ல. முழு ஆத்மாவும் அது எதை நம்புகிறதோ, அதுவாகவே மாறி விடவேண்டும். இதுவே (இதைச் செய்வதே) சமயம் ஆகும்.”