"God is in Our Land"

கோயில்கள்

கோயில்கள்:

 

நான் இங்கே கோயில்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், கோயில்கள் மற்றும் அவை சார்ந்த இடங்களில்தான் எனக்கு இந்த தலைப்பும், அதனுடைய பொருளும், சூட்சுமங்களும் வெளிப்பட்டன.

இறைவன் நம் எல்லோர் உள்ளும் இருக்கிறார் என்னும் உண்மையை கோயில்கள் பறைசாற்றுகின்றன; மனித உடலின் சூட்சும கட்டமைப்பை ஒத்திருக்கின்றன. கோயில் பிரகாரங்கள், மனிதனுடைய உணர்வு வளையங்களை குறிக்கின்றன. வைகாம்ச ஆகமத்தின்படி அதிகபட்சமாக ஏழு பிரகாரங்கள் ஒரு கோயிலுக்கு இருக்கலாம். இது மனிதனுடைய ஏழு வகையான உடல்கள் அல்லது உணர்வு நிலைகளைக் குறிக்கின்றன. அவையாவன: அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், சூட்சுமம், ஆணவமயம் மற்றும் ஆனந்தமயம். இவை மனிதனுடைய ஏழு சூட்சும சக்கரங்களுடன் தொடர்புடையவை. எடுத்துக்காட்டாக, மூலாதரம் அன்னமய சரீரத்துடன், பௌதீக உடலுடன், பூமிப் பிரபஞ்சத்துடன் தொடர்புடையது.

அந்த ஏழு சக்கரங்களைக் குறித்தும், அந்த ஏழுவகையான மனிதனுடைய பரிமாணங்களைப் பற்றியும் அறிவது என்பது மிக நீண்ட, தனிப்பட்ட ஒரு முனைப்பாகும்.

ராஜகோபுரம், இறை சூட்சும உருவத்தின் பாதமாகச் சொல்லப்படுகிறது; சிரசு அல்லது உச்சி கருவறையாக உள்ளது. இவ்விடமே கடவுளின் உறைவிடம். கோபுரங்களில் இருக்கும் சிற்பங்கள் இறைவனின் திருவிளையாடல்களை தெரியப்படுத்துகின்றன. அவை கலையுணர்வுடனும், கம்பீரத்துடனும் அமைந்திருக்கின்றன. அவை இறைவனின் வெவ்வேறான திருவிளையாடல்களை, குறிப்பாக கூறப்படும் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளள் ஆகிய ஐந்தொழில்களைப் பற்றி அமைந்த திருவிளையாடல்களை – உலகுக்கு பறைசாற்றுகின்றன. கருவறையின் முன்னே நிற்கும் கொடிமரம், மனித சூட்சும தேகத்தின் முதுகுத்தண்டினை குறிக்கிறது. முக்கியமான கோயில் விழாக்களின் போது, அதில் கொடியேற்றம் நடைபெறும். இது, நமது குண்டலினி சக்தியை முதுகுத்தண்டின் சூட்சும நாடிகளின் மூலம் மேலே எழுப்புவதைக் குறிக்கிறது.

பலிபீடம் கொடிமரத்திற்கு முன்னாள் உள்ளது. அனைத்து கர்ம வினைகளின் பலன்களையும், நெடுஞ்சாண்கடையாக விழுந்து இறைவனின் பாதத்தில் பலியிடும் – சமர்ப்பிக்கும் இடமே பலிபீடம். இத்தகைய ஒரு சமர்ப்பணம் நிகழ வேண்டுமானால், ஒருவனுடைய இறைசக்தி விழிப்படைந்து சூட்சும நாடிகளின் வழியே மேலெழும்ப வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே பலிபீடம், கொடிமரத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இது மனதை பக்குவப்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும். கருவரையில் இருக்கும் கடவுள் அல்லது ஆத்மநிலை இவையனைத்திற்கும் வெறும் சாட்சி மட்டுமே. உள்ளே இருக்கும் அர்ச்சாவதார மூர்த்த்தின் அமைப்பு ஆழமான தத்துவங்களை உணர்த்துவதாய் இருக்கும். ஆலயத்திற்கான முதல் காரணமாக இருந்தும் கூட, சஞ்சலம் அற்றதாக மக்களின் வெளிப்பார்வைக்கு இந்த விக்கிரகம் தோற்றமளிக்கிறது. இது, இறைத்தன்மை அல்லது ஆத்மா இந்த படைப்பிற்கான மூலமாக இருந்தாலும் கூட, எல்லா நேரங்களிலும் சஞ்சலமற்ற நிலையிலேயே உள்ளது என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறது.

இந்த பொதுவான நியதியிலிருந்து மாறுபட்டு, உரியவருக்கு, சில நேரங்களில் இந்த அர்ச்சாவதார மூர்த்தி சில சூட்சும நிகழ்வுகள் மூலமாக தனது தனித்தன்மையை, இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதுண்டு. இது இறைவனின் திருவிளையாடலே அன்றி வேறு அன்று.

பெரும்பான்மையான கோயில்கள், ஏழுக்கும் குறைவான பிரகாரங்களையே கொண்டுள்ளன. இவ்விடங்களில் நுட்பமான உணர்வு நிலைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகம சாஸ்திரப் படி அமைக்கப்பட்ட எல்லா கோயில்களும், கடவுள் ஒவ்வொருவரின் ஆத்மாவிலும் உள்ளார் என்னும் உண்மையை உணர்வுபூர்வமாய் உணர்த்துவதாய் உள்ளன. ஆகமங்களும், ஆலய கட்டமைப்பு, வழிபாட்டு முறைகளும் புரிதலுக்கு எளியவையாக இல்லாமல் இருக்கலாம். அவற்றின் உள்நோக்கம் யாதெனில், ஒவ்வொருவருடைய இறைத்தன்மையையும், செயல்முறைகளால் நினைவூட்டுவதேயாகும். கோயில்களும், அங்கு நடைபெறும் தனிப்பட்ட மற்றும் பொதுவான வழிபாட்டு முறைகளும், ஞானத்தின் மூலமாகவும், பக்தியின் மூலமாகவும் ஒருவரின் உணர்வு நிலைகளைத் தூய்மைபடுத்துவதாய் உள்ளன.

கோயில்களைப் பற்றிய படிப்பு மிகப் பெரியது ஆகும். சைவம், வைஷ்ணவம், சாக்தேயம் ஆகியவை குறித்த ஆகமங்கள் சுமார் 200 உள்ளன.

கண்டனங்களுக்குட்பட்ட மிருகபலி போன்ற சில சடங்குகள் சில கோயில்களில் நடைபெறுகின்றன. உண்மையில் மிருகபலி என்னும் பழக்கம் பல மதங்களிலும் வெவ்வேறு விகிதாச்சாரங்களில் புழக்கத்தில் உள்ளது. மதக் (Matagh) என்னும் மிருகபலி அர்மீனிய சர்ச்சுகளில் உள்ளது. கிறித்துவுக்கு முன்பிருந்தே இந்த பழக்கம் அங்கு நிலவுவதாக கூறப்படுகிறது. பணக்கார இஸ்லாமியர்கள் ஹச் யாத்திரைக்கு முன் வரும் எய்ட்-உல்- அதா விழாவின்போது ஒரு பெரிய பாலூட்டியைப் பலியிடுவது வழக்கம். ஹிந்து மதத்தில் உயிர்பலி என்பது ஒருசில சக்தி மற்றும் காவல்தெய்வங்களின் வழிபாடுகளில் மட்டுமே உண்டு. இத்தகைய உயிர்க்கொலைகள், இடைப்பட்ட காலகட்டங்களில் இருந்து, அஹிம்சை தத்துவத்தின் ஈர்ப்பினால் குறைந்து கொண்டு வருகிறது.

இந்த மிருகபலி, பெரும்பான்மையான தற்கால இந்துக்களால் விரும்பப்படுவது இல்லை. நானும் அவ்வாறே. இந்தியாவில் வேரூன்றிய பிற மதங்களான பௌத்தம், ஜைனம் மற்றும் சீக்கியம் முதலியவையும் உயிர்ப்பலியை கண்டிக்கின்றன.

கோயில்கள் ஆன்மீக உயர்வுக்கு மட்டுமன்றி, வேறுபல கோணங்களிலும் செயல்படுகின்றன. கோயில்கள், சமூக பொருளாதார கலாச்சார மையங்களாகத் திகழ்கின்றன. இங்கு நான், அவற்றின் முதன்மை நோக்கான ஆன்மீக விழிப்புணர்வை பற்றி மட்டுமே கூறி வருகிறேன். கோயில்களின், இந்த முதன்மை நோக்கத்தை மக்கள் எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ளது சுவாமி சிவானந்த சரஸ்வதியின் கூற்றாகும்:

”கோயில்கள் மற்றும் அவை சார்ந்த செயல்பாடுகளைப் பற்றி விளக்கும் சாஸ்திரங்களே ஆகமங்கள் ஆகும். ஆகமங்கள், இறைவனை வணங்குவது குறித்த விளக்கங்கள் மற்றும் செயல்முறை குறிப்புகளை உள்ளடக்கிய சாஸ்திரங்கள் ஆகும். அவை தந்திரங்கள், மந்திரங்கள் மற்றும் யந்திரங்கள் முதலானவற்றை உள்ளடக்கியிருக்கின்றன. அவை இறைவனை வெளிப்புறமாக வழிபடும் முறைகளைப் பற்றி விவரிக்கின்றன. அனைத்து எழுபத்தி ஏழு ஆகமங்களும் (சுவாமி அதிகாரப்பூர்வ மாய் உள்ள ஆகமங்களை மட்டும் குறிப்பிடுகிறார் போலும்) ஞானம், யோகம், கிரியை, சரியை ஆகிய இறைவனை உணர்வதற்கான மார்க்கங்களைப் பற்றிக் கற்பிக்கின்றன. ஆகமங்கள், பிரபஞ்சத்தின் ஆரம்பம், அண்டங்களைப் பற்றிய ஆய்வு, ஆத்மவிடுதலை, பக்தி, தியானம், மந்திரங்களின் தத்துவங்கள், பூடகமான சக்கர வரைபடங்கள், ஈர்ப்புத் தன்மையுள்ள எழுத்து வடிவங்கள் மற்றும் உச்சாடனங்கள், ஆலய கட்டுமானம், சிலை வடித்தல், கோயிலினுள் கடைபிடிக்கப்படவேண்டிய விதிகள், சமுதாயத்துக்கான விதிமுறைகள், பொதுவிழாக்கள் இவை பற்றிய செய்திகளை விரிவாக கூறுகின்றன.”

ஆகமங்கள், ஆலய வழிபாட்டு முறையினை, ஞானம் மற்றும் பக்தி இவற்றின் சரியான விகிதாசாரங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன. அவை கலை நயம் மிக்கவை. அதற்கு இணையாக, அறிவியல் பூர்வமானவை. கோயில் வழிபாடு, த்வைதம் என்று சொல்லக்கூடிய இருமைக் கோட்பாட்டைச் சார்ந்திருப்பது போல் தோன்றினாலும், அது உருவ அருவங்களுக்கு அப்பாற்பட்ட ஒருமைக்கே இட்டுச்செல்கிறது. ஆதிசங்கரர் முதலான அத்வைத ஞானிகளும் ஆலய வழிபாட்டை வலியறுத்துகிறார்கள்.

பக்தன் பகவானுடன் ஒன்றறக் கலந்து விடுவதே, பக்தியின் உச்ச கட்ட நிலையாக இருக்க முடியும். பக்தி அத்வைதத்திற்கு இட்டுச் செல்கிறது. மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் மற்றும் ஆண்டாள் நாச்சியார், இந்த உண்மையை தங்கள் வாழ்க்கையின் மூலம் உலகுக்கு உணர்த்தி யிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும், தங்களுடைய பௌதீக உடல்களை தாங்கள் வணங்கி வந்த ஆலயங்களினுள்ளேயே கரைத்து, இறைவனுடன் ஒன்றறக் கலந்துவிட்டவர்கள். ஆன்மா லயமாகும் இடமே ஆலயம் என்பதை உணர்த்தியவர்கள் இவர்கள். வணங்கிய உருவங்கள், இவர்களை உருவம் கடந்த நிலைக்கு இட்டுச்சென்றுள்ளன. இந்த ஆத்ம ஞானத்தை வழங்குபவை வெறும் வெளித்தோற்றங்களோ, அடையாளங்களோ அல்ல. பக்தர்களின் ஆழ்ந்த பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் ஞானம் – இவையே ஆத்மஞானத்தை, இறையுணர்வை தரவல்லவை. கோயில்கள் இந்த பக்தியையும், ஞானத்தையும் எழுப்புவிக்கும் மூல ஊற்றுக்கண்களாகத் திகழ்கின்றன. ஆலய வழிபாடு, ஆன்மீக வாழ்க்கையின் ஒரு ஆரம்பமாக சொல்லப்பட்டாலும், அது இறுதிவரையிலும் உடன் வரக்கூடியது.

அதனால்தான், ஆத்மஞானிகளாக விளங்கிய ஆதிசங்கரரும், இராமானுஜாச்சாரியாரும், இராமகிருஷ்ண பரம்மஹம்சரும் மற்றும் பல நாயன்மார்களும் கோயில் வழிபாட்டினை தங்கள் பௌதீக இருப்பின் இறுதிவரை மேற்கொண்டிருந்தார்கள். பக்தி, ஞானம் இவ்விரண்டையும் தூண்டுவதற்காக கோயில்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மக்களைப் பெரிதும் ஈர்த்திருப்பது பக்தி அம்சமேயாகும். இங்கு நான் பக்தி என்று குறிப்பிடுவது கடவுளின் மேல் செலுத்தும் பக்தி. கடவுளுக்காகவே செலுத்தும் பக்தி. பக்தி என்பது சத்தியத்திற்கான ஒரு தீவிர தேடல். வேறு காரணங்களுக்காக ஒருவர் கடவுளை வழிபடுவாரேயானால் அது நீர்த்துப்போன, கலப்படமடைந்த பக்தியாகும். சாமானியர்கள் கொண்டிருப்பது இத்தகைய பக்தியேயாகும். ஏனென்றால், முன்னர் கூறிய ஏழு சரீரங்களும் அவர்களிடம் கலங்கமுற்று இருக்கின்றன. கோயில்களையோ மற்ற திருத்தலங்களையோ, உண்மையான பக்தியுடன் வழிபட்டால், அவர்களும் கூட தங்களிடம் இருக்கும் மாசுக்களை நீக்கி, வீடுபேற்றை எய்தலாம். இதற்காகவே கோயில்கள் நிர்மாணிக்கப் பட்டன. ஆனால் நடைமுறையில் பெரும்பாலானோர் வெறும் வெளிச் சடங்குகளையே குருட்டுத்தனமாக, அதுவும் உலகாயத நன்மைகளுக்காக செய்து வருகிறார்கள். அவர்கள் ஆலயத்தின் முதன்மைப் பயனைப் பற்றி அறியாமலேயே உள்ளார்கள். ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே தன்னை அறிதல் அல்லது கடவுளை அறிதல் என்னும் குறிக்கோளைக் கொண்டுள்ளனர். அந்த வெகுசிலரே கோயில்களை சரியான முறையில் வழிபடுகிறார்கள்.

சில அடையாளங்கள் மூலம் இறைவனை அறிதல், என்பது எல்லா மதங்களிலுமே புழக்கத்தில் இருக்கும் ஒரு தவிர்க்கமுடியாத வழியாகும். கடவுளை ஆழ்ந்து சிந்திக்க ஒரு இடம் தேவைப்படுகிறது. அவ்விடத்தில் கற்சிலை இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அதற்குப் பதில் சிலர் மரத்தாலான சிலுவையைக் கொண்டுள்ளனர். சிலர் ஞானிகளின் படங்களையோ, நூல்களையோ கொண்டுள்ளனர். சிலர் அவர்களுடைய ஆலயத்தினுள் எந்த அடையாளத்தையும் வைக்காமல் போகலாம். பிற மதத்தாருடைய அடையாளங்களைக் குறை கூறுபவர்கள் கூட, கடவுளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட திசையில், ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் சில குறிப்பிட்ட வழிபடும் செயல்கள் மூலம் அதிகமாக உணரமுடியும் என்னும் கருத்தில் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

இது அடையாளங்கள் மூலம் வழிபடுதல் (அல்லது உருவ வழிபாடு) அன்றி வேறில்லை. இதற்குப் பொருள், அனைவருமே இறைவனை, அவரவர் மத வழிபாட்டுக்குரிய ஒரு சில இடங்களில் மட்டுமே அறிய முடியும் என்பது அல்ல. கடவுள் எங்கும் நிறைந்தவர். வெளிப்புற உதவிகள் தேவைப்படாதவர்களும், கடவுளை அறியலாம். வழிபடலாம். ஆனால், உள்முகமாக இறைவனைக் காண்போர், வெளி மார்க்கங்களின் மூலம் இறைவனை அறிய முற்படுவோர்களைக் குறை சொல்லக் கூடாது. உண்மை யாதெனில், ஏறக்குறைய அனைவரும் இறைவழி பாட்டுக்கான வெளிப்புற மார்க்கங்களை தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியிலேனும் சார்ந்தே இருக்கிறார்கள். மேலும், இத்தகைய இறைத் தன்மை கொண்ட ஸ்தலங்கள் தெய்வாம்சம் கொண்ட ஞானிகளின் ஆன்ம அதிர்வுகளை, அங்கு வருவோரின் ஆன்மாவைத் தொடும் வண்ணம் வெளிப்படுத்தியபடி உள்ளன.

”கடவுள் நம் தேசத்தில் உள்ளார்” எனும் செய்தி இருவழிகளிலும் பொருந்தும். கடவுளைத் தன்னுள்ளேயே உணர்ந்த ஒரு ஆத்மஞானி இதைக் கூறலாம்: அன்பு, அமைதி, ஆனந்தம் இவை வெளிப்படுகின்ற தேசங்களிலும், இதைக் கூறலாம். இறைவனை உணர்ந்தவர்கள் உறவாடும் இடங்களில்தான் மேற்குறிப்பிட்ட அன்பு, அமைதி, ஆனந்தம் முதலான நற்பண்புகள் இயல்பாய் வெளிப்படும். நாம், நம் தலைப்புச் செய்தியை இரு வழிகளிலும் அலசியுள்ளோம். இச்செய்தி ஒவ்வொருவருடைய இறைத்தன்மையையும் குறிக்கிறது. இறைத்தன்மையை உணர்ந்தவர்கள் மூலமும், இறையுணர்வை பிரதிபலிக்கும் புண்ணிய தேசங்கள் மூலமும், பன்னெடுங்காலமாக இறையுணர்வை பரப்பிவரும் பாரத தேசத்தையும் இச்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியாவில் தோன்றும் ஞானிகள் இதை உலகுக்கு தைரியமாக சொல்லி வருகிறார்கள்: ”நீயே இறைவன் ஆவாய். எல்லாம் உன்னுள் அடக்கம். குருவின் அருளின் மூலமாகவும், உன்னுடைய ஆத்ம சாதனைகள் மூலமாகவும் உன்னை நீ அறிவாயாக. மனிதர்களாகிய நீங்கள் ஆனந்தத்தின் ஊற்றுக்கண்களை தன்னுள்ளேயே கொண்டிருந்தும் சிறிய விஷயங்களுக்காக வெளியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்தும் உலகங்களிலும், ஆத்மாவை (அ) தன்னை அன்றி அறிவதற்கு வேறொன்றுமில்லை.”

கடவுள் நமது தேசத்திலேயே அதாவது நம்முள்ளேயே இருந்தும், அவரை நாம் எளிதாக கண்டுகொள்ள முடிவதில்லை. காரணம் நமது உணர்வுநிலை எப்போதும் வெளிஉலக சமாச்சாரங்களிலேயே ஈர்க்கப்பட்டு உள்ளது. அதனால்தான் முன்னர் குறிப்பிட்ட, திருவண்ணாமலை கோயிலினுள் எழுதப்பட்டிருந்த பாடல், கள்ளப்புலன்கள் என்று நமது உணர்வை வெளிப்புறமாக இழுத்துச்செல்லும் ஐம்புலன்களைக் குறிப்பிடுகிறது. அவற்றை நாம் வெல்ல வேண்டும். அது முடியுமென்றால், இறைவனை நம் தேசத்தில் உணர நம்மாலும் முடியும். எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலை ”கடவுள் நம் தேசத்தில் உள்ளார்” என்னும் செய்தியை பரப்புவதேயாகும். இதன் உள்ளார்ந்த பொருள், கடவுள் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதேயாகும். இங்கே ஸ்ரீபரமஹம்ச யோகானந்தரின் கூற்றை வைப்பது பொருத்தமாக இருக்கும்.

”கடவுளின் சர்வவியாபகத்தில் நாம் உள்ளோம் என்பதையும், அத்தன்மை நம்மை நோக்கி வருவதற்காக வணங்கவேண்டிய அவசியம் இல்லை என்பதையும், நாம் வெறுமனே கடவுளின் அருகே இல்லை- அவரின் சர்வ வியாபகமே நமது வியாபகமுமாகும் என்பதையும், எப்போதும் போல இப்போதும் கடவுளின் ஒரு அங்கமாகவே நாம் உள்ளோம்- அவரினின்றும் வேறுபட்டு அல்ல என்பதையும், உடல் அளவிலும், மனதளவிலும், ஆத்ம அளவிலும், உணர்தலே தன்னை அறிதல் (அதாவது ஆத்மஞானம்) ஆகும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது அறிதலை மேம்படுத்துவது மட்டுமேயாகும்”.