"God is in Our Land"

மனித ஜீவனில் இறைவன்

மனித ஜீவனில் இறைவன்:

 

”ஆத்மன் விழிப்பு நிலையில் கண்களில் வெளிப்படுகிறான்; ஸ்வப்னத்தில் கண்டத்தில் உள்ளான். சுஷீப்தியில் இருதயத்தில் (அநாகதசக்கரம்) வீர்யம் பெற்றுள்ளான்; துரியத்தில் உச்சியில் விளங்குகிறான்” – பிரம்மோபனிஷத்.

எங்கும் நிறைந்துள்ள பிரம்மம், ஜீவனுக்குள் ஆத்மரூபமாய் அறியப்படுகிறது. எனவே, ஆத்மனை அறிந்தவன் பிரம்மனை அறிந்தவனாகிறான். மேலே கூறப்பட்ட உபநிடத சூத்திரம், மனித ஜீவனுள் இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாண்மையைக் கூறுகிறது.

இந்த சூத்திரம் ஞான மார்க்கம் பற்றியதாய்த் தோன்றினாலும், இது பக்தி (இறைவனிடம் அன்பு) மார்க்கத்துக்கும் பொருந்தும். இந்த உணர்வு நிலைகள் அனைவருக்கும் பொதுவானவை.

ஞான மார்க்கத்தில் சுயமுயற்சி பிரதானமானது. இறைவனிடம் அடிபணிதல் என்பது துணை நிற்பது. பக்தி மார்க்கத்தில் இறைவனிடம் அடிபணிதல் என்பது பிரதானமானது, சுயமுயற்சி என்பது துணைநிற்பது. சுயமுயற்சி இல்லாமல், இறைவனிடம் அடிபணிய முடியாது. இறைவனிடம் அடிபணியாமல் சுயமுயற்சி கடை தேராது. முடிவு ஒன்றே. அது பற்றற்ற நிர்மலமான ஆனந்தமயமான அமைதி நிலை. இதுவே மனித ஜீவனின் இறுதியான இலக்கு – மனித வாழ்க்கையின் உயரிய நோக்கம்.

இந்த பௌதீகப் பிரபஞ்சத்தை ஒளி, ஒலி, காற்று, நீர் மற்றும் திடப்பொருள்கள் நிரப்பியுள்ளன. அனைத்திற்கும் மூலமான இறைவனே இந்த இயற்கைக்கும் மூலமாவான். இந்த இயற்கையில் ஒளியே அனைத்திற்கும் மூலமானது. ஒளியிலிருந்தே ஒலியும், மற்ற பொருட்களும் தோன்றியள்ளன. இறைவன் ஒளி வடிவினனாக வணங்கப்படுகிறான். ஒளி இல்லாத ஆலய வழிபாடு கிடையாது. ஒளி இல்லாத சடங்குகள் கிடையாது. இந்த ஒளியின் ஊற்றாக, கருவியாக உடலில் இருக்கும் உறுப்பு கண்தான். இறைவனின் எல்லை இல்லாத் தன்மையையும், எங்கும் நிரம்பியிருக்கும் பண்பையும் உணர்த்துவது கண்தான். நொடிப்பொழுதில், பல ஆயிரம் கோடி மைல்கள் தூரத்தில் இருக்கும் விண்மீன்களைக் கண் காண்கிறது; அடுத்த நொடியிலேயே, அருகாமையில் இருக்கும் வேறு ஒரு பொருளைக் காண்கிறது. இந்த அளவுக்கு வேகமும், துல்லியமும் பெற்ற உறுப்பு உடலில் வேறு இல்லை (மனம் இன்னும் வேகமானது. ஆனால் அது பௌதீகப் பொருள் அல்ல).

நாம் இருக்கிறோம் என்ற உணர்வை, ஜாக்கிரத்தில் ஜீவன் மற்றைய புலன்களையும்விட கண்களாலேயே பிரதானமாகப் பெறுகிறான். எனவேதான், ஜாக்கிரத்தில் ஆத்மா அல்லது இறைத்தன்மை கண்களில் வெளிப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்குப் பொருள், இறைத்தன்மை குருடர்களிடமோ, பிற உபகரணங்கள் மூலமாகவோ வெளிப்படாது என்பதல்ல.

திருவடி தீட்ஷை என்று ஒரு யோகம் உண்டு. இது ஒளியை அடிப்படையாகக் கொண்டு தன்னை உணரும் முறையைப் பற்றிச் சொல்கிறது. சூரத் சப்தயோகம் இறைத்தன்மையை ஒலியின் மூலம் உணர உதவி புரிகிறது. கிரியா யோகம் பிராணாயாம முறைகளால் நமது உணர்வு நிலையை இறைநிலையோடு முடிந்துவிடும் முறையைப் போதிக்கிறது. பிந்து விசர்க சக்கரத்தைத் (உச்சந்தலையில் இருப்பது) தூண்டும் தியானமுறைகள், சூட்சுமமான சுரப்பிகள் மூலம் (அமிர்தம் என்று சொல்லப்படுவது) இறைத்தன்மையைப் பெறுதலை நடைமுறையாக்குகின்றன. ஹட யோகம், இந்த பௌதீக உடலை கருவியாக்கி, அதன்மூலம் நமது நுட்பமான உடல் , இறைத்தன்மையை உணரும்படிச் செய்கிறது. இந்த யோக முறைகள் மிகவும் நுட்பமானவை; சூட்சுமமானவை. ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. பொதுவாக, இவை ஞானமார்க்கம் சார்ந்தவையாக உள்ளன. பக்தி மார்க்கத்திலும் ஒளி (ஆரத்தி), ஒலி (ஜபம்), நீர் (அபிஷேகம்), காற்று (வாசனைப் பொருட்களின் மூலம் காற்றில் இறைவனின் இனிமையை உணர்தல்) திடப்பொருள் (விக்கிரகங்கள்) ஆகிய கூறுகள் துணை நிற்கின்றன. எனவே, இயற்கையின் பிரதான ஐந்து கூறுகளும் ஆன்மீக சாதனைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை, சாதகன் பௌதீக உணர்வைத் தாண்டி ஆத்மன் அல்லது இறைவனுக்காக அமைதி மற்றும் ஆனந்த நிலையை உணர்வதற்கு உதவி செய்கின்றன. ஆத்மா அல்லது இறைத்தன்மை என்பது பௌதீகப் பொருள்களினின்றும் வேறுபட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படியென்றால், பௌதீகப் பொருள்கள் எப்படி இறைவனைக் காண உதவ முடியும்?

இறைவன் பௌதீகப் பிரபஞ்சத்திற்குச் சிறிதும் சம்பந்தப்படாதவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் பௌதீகப் பிரபஞ்சம் இறைவனின் வெளிப்பாடுகளில் ஒன்று (உணர்வு நிலையில் கீழானது என்று வேண்டுமானால் சொல்லலாம்) ஆத்மா அல்லது இறைத் தன்மை என்பது எங்கும் இருப்பது. அதனின்றும் வேறுபட்டு இருப்பது என்று ஒன்று இல்லை. வேறுபாடு என்பது ஜீவர்களின் பார்வையிலேயே இருக்கிறது. பிரகலாதன் இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் இறைவனைக் கண்டார்; அவரது தந்தை எல்லா இடங்களிலும் வெறும் பௌதீகப் பொருள்களையே கண்டார். பிரகலாதனின் உயர்வான உணர்வு நிலையின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் பொருட்டு, இறைவன் ஒரு தூணினின்று வெளிப்பட்டு நின்றார். இந்த புராணம், இறைவன் இந்த உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி நிறைந்துள்ளார் என்னும் உண்மையை விளக்குகிறது. இறைவனின் சர்வவியாபகத் தன்மையை உணர்த்தும் இத்தகைய நிகழ்வுகள் வரலாற்றிலும் உள்ளன.

ஸ்வப்னத்திலும், சுஷீப்தியிலும், துரியத்திலும் பௌதீக உடலில் உள்ள குறைபாடுகள் ஒரு பொருட்டே அல்ல. அந்நிலைகளில், அனைவரும் ஒரே மாதிரியாகவே, அவரவர் வினைக்கேற்றவாறு தன்னிலையை உணருகிறார்கள்.

இவ்வாறாக, ஐம்புலன்களையும் (ஞானமார்க்கம்), ஐம்பூதங்களையும் (பக்தி மார்க்கம்) ஆத்ம உணர்வோடு காணும்போது இறைசாட்சாத்காரம் சித்திக்கறது. இந்த இரண்டு மார்க்கங்களின் நோக்கமும் ஒன்றே. அது உண்மையை உணர்வதே. நோக்கமும், செயலும் உண்மையைப் பற்றியதாய் இருக்கம்போது புலனடக்கம் ஏற்படுகிறது; இயற்கை தன்வசம் ஆகிறது; இறுதியில் இறையனுபூதி கைகூடுகிறது.

ஜாக்ரத் நிலையாகட்டும், ஸ்வப்ன நிலையாகட்டும், சுஷீப்தியாகட்டும், துரியமாகட்டும் – சூக்ஷீமமாக இறையுணர்வை (அ) தன்னிலையை உணர்த்தும் கருவி மனமேயாகும்.

இந்த மனத்தை கட்டுக்குள் கொண்டு வருவது அல்லது செம்மைப்படுத்துவது என்பதை ஜாக்ரத் நிலையில் யோக சாதனைகள் (ராஜயோகம், ஞானயோகம், கர்மயோகம் பக்தியோகம் முதலானவை) மூலம் கைவரப்பெறலாம். மனம் செம்மைப்படாமல், எந்த உணர்வு நிலையிலும் உயரிய ஆன்மீக அனுபவங்கள் பெறுவது அரிதாகும்.

மாசுபட்ட மனம், சுயமுயற்சியால் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொண்டு தூய்மையடையும்போது (முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்) கருவி என்னும் அடையாளத்தை இழந்து, தனக்கு காரணமான ஆத்மாவோடு அதாவது இறைவனோடு ஒன்றறக் கலந்துவிடுகிறது. ஒரே வாக்கியத்தில் கூறப்பட்டிருந்தாலும், இது நடைமுறையாவதற்கு ஒரு சாமானியனுக்கு பல ஆயிரம் பிறவிகள் தேவைப்படலாம்.

மனம் செம்மையானவர்கள், அதாவது மனம் தூய்மைப்படுத்தப் பட்டவர்கள் தன் நிலைக்கும் எங்கும் நிறைந்துள்ள இறைத்தன்மைக்கும் எந்த வேறுபாடும் காண்பதில்லை. சுத்தமாகி இருக்கும் காலிப்பாத்திரத்தில் இருக்கும் வெளிக்கும் (வெறுமைக்கும்) அதற்கு வெளியே இருக்கும் வெளிக்கும் எவ்வாறு பேதம் இல்லையோ, அவ்வாறு அவர்கள் இறைவனுடன் ஏகத்துவத்தைப் பெறுகிறார்கள். ஜாக்ரதம், ஸ்வப்னம், சுஷீப்தி, துர்யம் போன்ற உணர்வு நிலை வேறுபாடுகள் அவர்களுக்கில்லை. அந்நிலைகளுக்குள்ள சட்டதிட்டங்களால் அவர்கள் பாதிப்படைவதில்லை. பாதிப்பு பாத்திரத்திற்கே அன்றி அவர்களுக்கில்லை. பாத்திரம் (அதாவது உடல்) இருக்கும்வரை ஜீவன் முக்தர்களாக இருக்கும் அவர்கள், பாத்திரம் உடைந்ததும் விதேக பூரண முக்தர்களாகிறார்கள்.