"God is in Our Land"

கடவுள் நம் தேசத்தில் உள்ளார்

கடவுள் நம் தேசத்தில் உள்ளார்:

 

சில வருடங்களுக்குப் பின் அந்த வாசகத்தை, அதை எழுதியவரின் பெயரோடு சேர்த்துப் பார்க்க நேர்ந்தது. அது ஒரு பாடலின் வரி. அந்த முழுப் பாடலை, பின்னர் வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் பெற்றேன். அதன் தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு:

”நம் அன்பினால் அறிவார்கள், நாம் கிறித்துவர் என்று. ஆம், நம் அன்பினால் அறிவார்கள், நாம் கிறித்துவர் என்று. நாம் ஒற்றுமையுடன் கை கோர்த்துச் செல்வோம். நாம் ஒற்றுமையுடன் கை கோர்த்துச் செல்வோம். ஒன்றாய்ச் சொல்வோம் இந்த உலகிற்கு “கடவுள் நம் தேசத்தில் உள்ளார்“ என்று”.

– பீட்டர் ஸ்கால்டிஸ்

பீட்டர் ஸ்கால்டிஸ் தனது சமூகத்தை “கடவுள் நம் தேசத்தில் உள்ளார்“ என்ற செய்தியை பரப்ப அழைக்கும்போது, உண்மையில் அவர் மக்களிடையே வலியுறுத்த முயல்வது அன்பையும், கருணையையும்தான். இறைவனின் இருப்பைக் குறித்து எதையும் சொல்ல அவர் முற்படவில்லை.

ஒரு கிறித்துவனுக்கான தகுதியை அவர் வரையறுக்க முயற்சித்திருக்கிறார். அவர் வாக்குப்படி, இதயத்தில் அன்பு நிறைந்தவன் கிறித்துவன். அடுத்தநாள், என் தாயாரின் அறிவுறுத்தலின்படி, கட்டளையின்படி – மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றேன். அங்கு சில பக்திமான்களால் கீழ்காணும் வரிகள், உரக்கப்பாடப்படுவதைக் கேட்டேன்.

”தென்னாடுடை சிவனே போற்றி;
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

பீட்டர் ஸ்கால்டிஸ் ‘கடவுள் நம் தேசத்தில் உள்ளார்’ என்ற வரியை 20ம் நூற்றாண்டில் கூறியுள்ளார். இங்கே, தென்னகத்தே, சைவக் குறவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் ”தென்னாடுடை சிவனே போற்றி” என்று மூன்றாம் நூற்றாண்டிலே கூறியுள்ளார். கடவுள் தென்னகத்தே உள்ளார் என்று அவர் ஆணித்தரமாக கூறுகிறார்.

மாணிக்கவாசகரைக் (கிபி 285 முதல் கிபி 317) குறித்து சில வார்த்தைகள்: அவரால் மொழியப்பட்ட பக்தி இலக்கியமான திருவாசகம், கடவுள்பால் அவர் கொண்டிருக்கும் அன்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான உச்சகட்ட நிலையை உணர்த்துவதாக உள்ளது.

அவர், இந்த உலகிலிருந்து விடைபெற்ற முறையே ஒரு அதிசயமாகும். அவர், சிதம்பரம் பெரிய கோயிலில் மறைந்துவிட்டார். இதேபோல், தமது பௌதீக உடலை சூட்சுமமான முறையில் கரைத்துவிட்டு சென்ற பக்திமான்கள் இந்திய வரலாற்றில் உள்ளனர்.

திரும்பவும் கபாலீஸ்வரர் கோயிலில் கேட்ட பக்தி வரிகளுக்கு வருவோம். அதற்கு உள்ளார்ந்த பொருள் உள்ளது. பொதுவாக கூறப்படும் பொருள்யாதெனில், இறைவன் (அ) சிவபெருமான் தென்னகத்தே உள்ளார். சிவபெருமான் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பக்தியின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறார். இங்கிருக்கும் சிவபெருமானின் கோயில்கள் எண்ணிலடங்காதவை. காலங்கள் கடந்தவை. பிரமாண்ட வடிவம் கொண்டவை. இவை இறைவனின் கருணை, மேன்மை மற்றும் கம்பீரத்தை இன்றும் பறைசாற்றி வருகின்றன. இங்கு கடவுள்பால் பக்தியுடன் வருகிறவர்கள் – அன்னாரின் இருப்பை உணர்கிறார்கள். அவ்வாறு உணர்ந்தவர்கள் கூறியதே ”தென்னாடுடை சிவனே போற்றி” என்பது.

கடவுளின் இருப்பை உணர்ந்தவர்கள், அவர் குறிப்பிட்ட எல்லைகளுக்கோ, வரையரைகளுக்கோ அப்பாற்பட்டு இருப்பவர்- அனைவருக்கும் பொதுவானவர் என்பதையும் உணர்ந்திருக்கிறார்கள். எனவே, அடுத்த வரியில் இவ்வாறு கூறுகிறார்கள்: ”எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” இறைவன்பால் பக்தியோடிருக்க ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இறைவனை எங்கும் காண்கிறார்கள் – தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, அதைச்சுற்றியுள்ள இடங்கள் என எங்கும் காண்கிறார்கள். இதுவே அந்த பக்தி வரிகளுக்கான பொதுவான விளக்கமாகும்.

இனி உள்ளார்ந்த விளக்கத்தைக் காண்போம். மனிதனின் சூட்சும தேகத்தில், சுழிமுனை நாடியின் ஆரம்பத்தில் இருக்கும் மூலாதார சக்கரம் தென்திசை அல்லது தென்துருவம் என சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. நெற்றிப் பொட்டில் இருக்கும் ஆக்ஞயமே வடதிசையாகும். ஒவ்வொருவருடைய இறைத்தன்மையும், இந்த மூலாதாரத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மூடர்களுக்கு அது உறக்க நிலையில் இருக்கும்.

ஒருவருடைய ஆன்ம சாதனைகளின் மூலம் இந்த இறைச்சக்தி விழிப்பு பெற்று சுழிமுனை நாடியின் மூலம் ”மூன்றாவது கண்” என்று சொல்லப்படும் ஆக்ஞய சக்கரத்துக்கு எழும்புகிறது. இந்த இறைச்சக்தியே குண்டலினி என்று பொதுவாக அறியப்படுகிறது. ஒவ்வொரு சூட்சும சக்கரத்திலும் (வெவ்வேறு சமய மார்க்கங்களிலும்) வெவ்வேறு பெயர்களைத் தாங்கியிருந்தாலும், இந்த இறைச் சக்தி, அனைவருக்கும் ஒன்றேயாகும். இவ்வாறாக ஒவ்வொருவருடைய இறைத்தன்மையும், அவருடைய மூலாதார சக்கரத்தில் அதாவது தென்னாட்டில் உள்ளது. எனினும், இந்த இறைத்தன்மை ஒவ்வொருவருடைய இருப்பு நிலை முழுவதும் பரவியுள்ளது. இந்த தெய்வீக சக்தியை நாம் நம்முள் அடக்கி வைத்திருக்கவில்லை. எங்கும் நிறைந்துள்ள தெய்வீக சக்தியுடன், நாம் சூட்சும சக்கரங்கள் மூலம் இறையருளால் தொடர்பு பெற்றுள்ளோம். அவ்வளவே. எனவேதான்,

”தென்னாடுடை சிவனே போற்றி;
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

என்று பக்திமான்களால் பாடப்பட்டது.

இறை நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒவ்வொருவருடைய தென் திசையிலும், இந்த இறைச்சக்தி இயல்பாகவே உள்ளது. பெரும்பான்மையோருக்கு, இந்த இறையுணர்வு உறக்க நிலையில் உள்ளது; சிலருக்கு, விழிப்பு நிலையில் உள்ளது. வெகு சிலருக்கு, அவர்களுடைய ஆன்ம சாதனைகளில் வட திசையை நோக்கிய பயணத்தில் உள்ளது.

எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரிடத்திலும் இறைச்சக்தி தென்னாட்டில் அதாவது மூலாதாரத்தில் உள்ளது. எனவேதான், ‘தென்னாடுடைய சிவனே’ போற்றி என்று உறுதியாக சொல்லப்பட்டிருக்கிறது.

மூலாதாரத்தில், இறைவன் ”பசுபதி” அதாவது, விலங்குகளின் -விலங்குணர்வு கொண்டவார்களின் தலைவன் என அறியப்படுகிறார். ஆக்ஞய சக்கரத்திரல், சிவலிங்கமாக – ஒளிப்பிழம்பாக அறியப்படுகிறார். சஹஸ்ராரத்தில், தலையுச்சியில் ‘ஆதியனாதி’, அதாவது எல்லையற்றவராக அறியப்படுகிறார். ஒவ்வொருவரும், அவரவர் உணர்வு நிலையில் மாறுபட்டிருப்பதால், இந்த இறைச்சக்தி, அவரவர் உணர்வு நிலைக்கு ஏற்றார்போல் வெவ்வேறு பெயர்களையும், வடிவங்களையும் தாங்கியிருக்கிறது – காற்றானது தனது வேகத்திற்கும், வடிவுக்கும் ஏற்றார்போல் சூறாவளி, சுழற்காற்று, தென்றல் என்று வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருப்பது போல்.

இவ்வாறாக, கடவுள் நம் தேசத்தில் (தேகத்தில்) உள்ளார். ”அஹம் பிரம்மாஸ்மி” எனும் மஹா வாக்கியமும் இதையே வலியுறுத்துகிறது. இதை ஆத்மார்த்தமாய் உணர்ந்தவர்கள், இறைவனின் அம்சமாகவே உள்ளார்கள். இத்தகையவர்கள், எல்லா காலகட்டங்களிலும், இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில், மனித சமூகத்திற்கு உள்ளேயோ, வெளியேயோ இருந்தே வருகிறார்கள்.