"God is in Our Land"

சாஸ்திரங்களில் கடவுள்

சாஸ்திரங்களில் கடவுள்:

 

போன அத்தியாயத்தில், கோயிலினுள் நான் கண்ட பாடல், பதிணெண் சித்தர்களில் ஒருவரான திருமூலரால் எழுதப்பட்டது. சித்தியை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். ஒருவர் தன் உடல் சார்ந்த உணர்வுகளை வென்றவர் என்றால், அவர் சித்தர் எனப்படுகிறார். அத்தகையவர்கள் நீரின்மேல் நடப்பது, காற்றில் மிதப்பது, எந்த அளவுக்கேனும் பெரிதாக வடிவமெடுப்பது, அணுவிற்கும் அணுவாக சுருங்கிக்கொள்வது முதலான இதர பண்புகளையும் பெற்றிருப்பர். ஆனால், அவர்கள் அத்தகைய சக்திளை பிறரின் ஆன்ம விழிப்புணர்ச்சியின் பொருட்டே உபயோகித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் எளிமையானவர்களாக இருப்பவர்கள். உணவு, உறைவிடம், உடை முதலியவை குறித்தோ, தங்களின் பெயரைக் குறித்தோ கூட அவர்கள் சட்டை செய்வதில்லை. சித்தர்கள் எங்கு வேண்டுமானாலும், எந்த வடிவத்திலும் தோன்றக்கூடிய வல்லமை பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள், மறைமுகமான உட்பொருள் அடங்கிய, சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய செய்யுள்களை வழங்கியுள்ளார்கள். இச்செய்யுள்கள் அனைத்தும், கடவுள் அனைவரின் உள்ளேயும், உள் கடந்து இருக்கிறார் என்பதை உறுதி செய்பவையாக இருக்கின்றன. சித்தர்கள், நாம் இறைவனை நமக்குள் உணரவும், அவனைக் காணும் பொருட்டு கடுமையாக உழைக்கவும் தூண்டுகிறார்கள்.

ஒரு கதை உண்டு. ஒரு ஆன்மீக குரு, தனது சீடர்களுள் தகுதியுள்ள சிலரை, ஆத்ம ஞானத்துக்கான உயரிய பயிற்சிக்காக தேர்வு செய்து கொண்டிருந்தார். அந்த நாட்களில், மாணவர்கள் ஆசிரியரின் தனிப்பட்ட வழிமுறைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்பயிற்சிகளில் தேர்ந்தவர்களே அடுத்த நிலைப் பயிற்சிக்குச் செல்ல முடியும். அந்த ஆத்மஞான ஆசிரியர், தனது மாணவர்களுள் இருவரை அழைத்தார். ஒவ்வொருவரிடமும் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அதை யாருக்கும் தெரியாத ஒரு இரகசிய இடத்தில் இருந்து கொண்டு சாப்பிடுமாறு கூறினார். முதல் மாணவன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததும், ஒதுக்குப்புறமாக ஒரு குழியைக் கண்டான். அதனுள் குதித்து சுற்றுமுற்றும் நோக்கினான்.

தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின், ஒரே நிமிடத்தில் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த மாம்பழத்தை உண்டு முடித்தான். பிறகு வெற்றிப் பெருமிதத்தோடு மேலே ஏறி, தனது குருவிடம் சென்று சொன்னான்; “குருவே, நான் யாரும் என்னைக் கவனிக்க முடியாத இடத்திற்கு சென்று, மாம்பழத்தை உண்டுவிட்டேன்“. அந்த குரு எதுவும் பேசாமல் புன்னகைத்தார். இரண்டாமவனும் ஆசிரமத்துக்கு வெளியே வந்து ஏகாந்தமான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட ஒரு இடத்தை அவனால் காண முடியவில்லை. அவன் காட்டின் உட்புறத்திற்குச் சென்றான். ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று தீர்மானிக்க எத்தனித்தான். ஆனால் அந்த மரமும், மற்ற ஜீவராசிகளும் தன்னைக் கண்டு கொண்டிருப்பதை உணர்ந்தான். இன்னும் உள்ளே செல்ல தீர்மானித்தான். சிறிது நேரம் கழித்து, மரங்களோ வேறு ஜீவராசிகளோ இல்லாத ஒரு இடத்தை அடைந்தான். மாம்பழத்தை உண்பதற்காக வாயருகே கொண்டு சென்றான். “நில், உன்னை யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்“ என்று அவனுள் ஏதோ உணர்த்தியது. அவன் அன்னாந்து பார்த்தான். வானமும், சூரியனும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன. மாம்பழத்தை மறைத்தவாறே, அக்காட்டின் மிக உட்புறத்திற்கு வந்தான். அங்கு இருண்ட ஒரு குகைக்குள் அடைக்கலமானான். அவன் உருவத்தையே அங்கு அவனால் பார்க்கமுடியவில்லை. அவ்வளவு இருட்டு. அவன் மாம்பழத்தை சுவைப்பதற்கு தயாரானான். “நான் இங்கேயேதான் இருக்கிறேன். நான் கூறுவது உனக்கு கேட்கவில்லையா?“ என்று ஏதோ ஒன்று ஒலித்தது. அவன் யாருமே இல்லாத ஒரு இடத்தை தன்னால் அறிய முடியாது என்று உணர்ந்தான். தனது குருவிடம் ஓடிச்சென்று அவர் பாதங்களில் விழுந்தான். “குருவே, என்னை யாரும் காணமுடியாத இடத்தை அறிய முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. நான் எங்கு சென்றாலும், எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர், என்னை விடாது தொடர்ந்து வருவதாக உணர்கிறேன்”.

ஆன்ம ஆசிரியர் புன்னகைத்தவாறே கூறினார்: “அடுத்த பயிற்சிக்கு நீ தேர்வு செய்யப்பட்டுள்ளாய்“. கடவுள்பால் உண்மையான நம்பிக்கை உடையவன், தான் எப்போதும் கடவுளின் பார்வையிலேயே இருக்கிறோம் என்று உணர்கிறான். அவனைப் பொருத்தவரையில், கடவுள் எங்கும் வியாபித்திருப்பவர்.

சாஸ்திரங்கள் கூறுகின்றன:

இந்த பௌதீகப் பிரபஞ்சம், ஐந்து அடிப்படை கூறுகளால் ஆனது. அவை: ஆகாயம், நெருப்பு, காற்று, நீர் மற்றும் நிலம். மனித உடலும், அதே ஐந்து கூறுகளால் ஆனது. ஆகாயம் (நமது உடலில் இருக்கும் வெற்றிடம்,) நெருப்பு (நமது உடலில் இருக்கும் சூடு), வாயு (நமது உடலில் இருக்கும் பலவித வாயுக்கள்), நீர் (இரத்தம் மற்றும் பிற அமிலங்கள்) மற்றும் நிலம் (எலும்புகளும், சதையும்). இந்த ஐந்து கூறுகளும், பிற சூட்சும கூறுகளும் மனதால் ஆளப்படுகின்றன. இந்த மனத்தையும் சேர்ந்து மற்ற எல்லாவற்றையும் இயக்குவது ஆத்மா. இந்த ஆத்மாதான் நமக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளவற்றை இயக்குகிறது. இந்த ஆத்மா இருப்பதால்தான், நாம் நமது உடலையும், இந்த உலகத்தையும் உணர்கிறோம். ஆத்மா இல்லை எனில் இந்த உடலும் இல்லை. உலகமும் இல்லை. ஆத்மா எங்கும் வியாபித்திருப்பதாக (ஆகாயம் போல்), சாஸ்வதமானதாக, நிலையானதாக, பெயரோ-வடிவமோ அற்றதாக கூறப்படுகிறது. வேதங்கள் இந்த ஆத்மாவே கடவுள் என்று குறிப்பிடுகின்றன. இந்த ஆத்மா, தனது ஆனந்த மற்றும் சாந்த நிலையில் நித்தியமாய் நிலைப்பெற்றுள்ளது.

நமது இறுதியான குறிக்கோள். இந்த ஆத்மாவை உணர்வதே ஆகும். இதை உணரும் வரை துயரங்கள் நிறைந்த பிறப்பு-இறப்பு வலைக்குள், பல விதமான பிறப்புகளையும், இறப்புகளையும் நமது கர்மவினைக்கேற்ப அனுபவித்து வருகிறோம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. என்னை வழிநடத்தும் ஆத்மாவும், உன்னுள் இருக்கும் ஆத்மாவும் ஒன்றே ஆனதால், ஒரே தன்மையுடனிருப்பதால், உனது வலியை என்னால் உணரமுடியும்; நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது, என்னால் புன்னகைக்கமுடியும். இதற்கு மாறாக அமைந்தால், நான் என்னைச் சுற்றி சுவர்கள் எழுப்பி வருகிறேன் என்று பொருள்; நான் கடவுளிடமிருந்து விலகிச் செல்கிறேன் என்று பொருள். இவ்வாறாக, வெளி உலகமும், உள் உலகமும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் உபநிடதங்கள் பிறர் துன்பத்தைக் கண்டு தானும் துக்கிப்பவனே ஹிந்து (ஹிம்ஸாயாம், தூயதே யஸ; ஸ; ஹிந்துரி த்யபிதீயதே) என்று கூறி, ஹிந்து என்னும் சொல்லுக்கான பொருளை விளக்குகின்றன.

அத்வைதிகளின் கொள்கைப்படி, ஆத்மாவும், பரமாத்மாவும் (அ) இறைவனும் ஒன்றே. இறைவனின் அனைத்து குணநலன்களையும், ஆத்மாவும் பெற்றுள்ளது. இதை உணர முற்படுவதே மனித வாழ்க்கையின் அடிப்படை இலட்சியமாகும். ஆத்மா, இயல்பாகவே சூரியனைப் போல சுயம்பிரகாசமுடையது. மக்கள் ஆத்மாவை அல்லது அதன் பிரகாசத்தைப் பார்ப்பதாகச் சொல்கிறார்ககள். ஆனால் அதைப் பார்த்தல் என்பது இல்லை. ஏனென்றால், அதைத்தவிர இன்னொன்று இல்லை. அதற்கு அப்பால் என்று எதுவும் இல்லை. அது பார்ப்பதும் இல்லை; பார்க்கப்படுவதும் இல்லை. பார்ப்பதற்கென்றோ, நுகர்வதற்கென்றோ அதற்கு எந்த உறுப்புகளும் இல்லை. ஒரு குறிப்பிட்ட பணிக்காக ஒருங்கிணைக்கப்படும் எந்த பகுதியும் அதனிடம் இல்லை. இந்த பாடத்தைக் கூறுவது பிரஹதாரண்யகோபநிஷத்.

நாம், வேதங்கள் மற்றும் அதைச் சார்ந்த தத்துவங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல், தூய்மையான, வெளிப்படையான இதயத்துடன் மற்றவர்பால் அன்பு செலுத்துவோரைக் காண்கிறோம்.

சாஸ்திரங்களின் கூற்றுப்படி அவர்கள், உதட்டளவில் அனைத்து வேதங்களையும் பாராயணம் செய்துவிட்டு மனதளவில் தூய்மையும், அடக்கமும் இல்லாதவர்களைவிட, ஆத்ம சாக் ஷாத்காரத்துக்கு நெருக்கமானவர்கள். பணிவு இல்லாத அறிவு, ஆண்டவனுக்கான பாதையில், மிகக் கடுமையான எதிரியாகிய ஆணவம் என்னும் இரும்புச் சுவற்றை எழுப்புகிறது.

ஏற்றத்தாழ்வுகளைக் கடந்த எல்லையில்லா அமைதி நிலையை, நாம் நமக்குள் பெற்றுள்ளோம். போர்களும், வன்முறைச் செயல்களும், சுகாதார சீர்கேடுகளும் இந்த வெளி உலகத்தின் அமைதியைக் குலைப்பதுபோல், நமது பொருள் சார்ந்த காமம், பொறாமை, ஆணவம் முதலானவை நம் உள் அமைதியைக் கெடுக்கின்றன. மதம் சார்ந்த அமைப்புகள் இந்த இரு வகையான பிரச்சனைகளுக்கும் எதிராக செயல்படுகின்றன. எந்த ஒரு சமூக சீர்திருத்தம் அல்லது முன்னேற்றத்துக்கான முயற்சியும், அது இவ்விருவகை பிரச்சனைகளையும் எதிர் கொள்ளாத வரையில், தனது நோக்கத்தில் முழுமைபெறாது. மனிதனுடைய வாழ்க்கை நிலையற்றது. ஒருவன் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்தவனாக அல்லது துக்கம் மட்டுமே கொண்டவனாக இருந்துவிட முடியாது. மனிதனின் இறுதியான குறிக்கோள், இந்த இருமைகளிலிருந்து விடுபட்டு, சாசுவதமான அமைதியையும் ஆனந்தத்தையும் அடைவதே என்று உபநிடதங்கள் கூறுகின்றன. அந்த அமைதியான ஆலத்தை நமக்குள் உணரும் வரை, நமது தேசத்துக்குள் உணரும் வரை, ஆத்ம விழிப்புணர்வுக்கான பயணத்தில் நாம் பல வாழ்க்கைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.