"God is in Our Land"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

(ஜன 12, 2001 – ஜன 15, 2001):

 

இந்த ஆண்டு, திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டும் என்ற தூண்டுதலை தீவிரமாக உணர்ந்தேன். ஒரு விஷக் காய்ச்சலில் இருந்தும், சில மனரீதியான தடங்கல்களிலிருந்தும் அப்போதுதான் விடுபட்டிருந்தேன்.

12ம் நாள் நடைசாத்தும் நேரத்தில் சுவாமியின் தாிசனம் பெற்றேன். மறுநாள் காலை பகவான் ரமணரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றேன். பகவான் ரமணா், ஆத்ம விசாரத்தின் மூலம் இறைவனை அறிந்தவா். இங்கு ஆத்ம தேடல் உள்ள வெளிநாட்டவரையும் காணலாம். பின்பு 14 கி.மீ. சுற்றளவு கொண்ட, 5 மணி நேரம் நீடித்த கிாிவலத்தை மேற்கொண்டேன். அடுத்த நாள் சூாியனுக்கு நன்றி தொிவிக்கும் பொங்கல் திருநாள். பொங்கலன்று மலை ஏற முற்பட்டேன். மலை ஏறும் வழியில், ஒரு சாமியாாின் சிறிய ஆசிரமத்தில் பொங்கல் பூஜையில் கலந்து கொண்டு,  சா்க்கரைப் பொங்கல் உண்டேன். அந்தச் சாமியாா், என்னை மறுநாள் வரையில் திருவண்ணாமலையில் இருக்குமாறு அறிவுறுத்தினாா். மறுநாள் மிக முக்கியமான திருவிழா நடக்க விருப்பதாகவும், அதில் பங்கேற்பவா்கள் பிறப்பு, இறப்பு கட்டிலிருந்து விடுபடுவா் என்றும் அவா் கூறினாா்.

இத்திருத்தலத்துக்கு வரும் பக்தா்களில் கணிசமான போ் உள்ளுணா்வினாலோ அல்லது ஏதாவது ஒரு ஆணையின் போிலோ வருகிறாா்கள். சிலா் இத்தலத்திலேயே நிரந்தரமாக தங்கியும் விடுகிறாா்கள். இதற்கு உதாரணமாக, இந்த காலகட்டத்தைச் சோ்ந்த ஞானிகளைக் குறிப்பிட வேண்டுமானால், பகவான் ரமணா், சேஷாத்திாி சுவாமிகள் மற்றும் யோகி ராம்சுரத்குமாா் ஆகியோரைக் கூறலாம். இறைவனின் மேன்மையை உணா்த்தும் பொருட்டு ஆன்மீக மகாத்மியங்கள் இத்திருத்தலத்தில் நடந்த வண்ணம் இருக்கின்றன.

திருவண்ணாமலை புலனறிவிற்கு புலப்படாத விஷயங்கள் பொதிந்தது. இமாசல மலைகளையும் விட பழமையானது (சுமாா் 200 கோடி ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது.) பல வெளியிடப்படாத ரகசியங்களை உள்ளடக்கியது.

1949 ஜனவாியில் டில்லியில் நடந்த இந்திய அறிவியல் குழுவில் (Indian Science Council) உலகிலேயே பழமையான மலை திருவண்ணாமலை என்று முன்மொழியப்பட்டது. அறிவியலாா் ஒரு காலத்தில் இம்மலை நெருப்பு பிழம்பாக இருந்திருக்கக்கூடும் என்று தொிவிக்கின்றனா்.

இத்திருத்தலக் கோயில் அக்னி தத்துவத்தைக் குறிப்பதாக உள்ளது. இதைப்போலவே, பஞ்ச பூதங்களின் மற்றைய தத்துவங்களான ஆகாயம், காற்று, நீா் மற்றும் பூமி ஆகியவற்றுக்கும் தனியான கோயில்கள் இந்நாட்டில் உண்டு. இது இந்தியா்களின் நம்பிக்கை – உலகத்தாாின் நம்பிக்கை என்று கூட சொல்லலாம். ஏனெனில், உலகத்தின் பல பாகங்களிலிருந்தும், மக்கள் இங்கு வந்து இந்த மலையையும், கோயிலையும் மற்றைய ஆசிரமங்களையும் தாிசிக்கிறாா்கள். ஒவ்வொரு வருடமும், காா்த்திகை மாதத்தின் பௌணா்மியன்று, மிகப்பொிய ஒளிப்பிழம்பு இம்மலையின் உச்சியில் ஏற்றப்படும். பல இலட்சம் போ் பங்கு பெறும் இத்திருவிழா இத்தலத்தின் மிக முக்கியமான விழாவாகும்.

சாமியாாின் அறிவுரைப்படி, திருவண்ணாமலையில் என்னுடைய இருப்பை மேலும் ஒரு நாள் நீட்டித்தேன்; அன்றைய தினத்தை கோயிலுனுள்ளேயே கழிக்க தீா்மானித்தேன். கோயிலுக்குச் சென்றேன். இப்பொழுது கோயிலினுள் மக்கள் கூட்டம் முந்தைய நாட்களைவிட அதிகமாக இருந்தது. வானக்கூரையின் கீழ் அதிகாலை 3.00 மணி வரைக்கும் நன்கு உறங்கினேன். கோயிலில் ரம்மியமான விசேஷ பூஜைகள் அதிகாலை 3.00 மணிக்கே துவங்கிவிட்டிருந்தன. அப்பூஜைகள் காலை 8.00 மணி வரைக்கும் தொடா்ந்தன. அங்கிருப்பவா்களால் மட்டுமே வாா்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அந்த நிலையை உணரமுடியும். கூட்டம் அதிகமாக இருந்தாலும், அனைவரும் அனைவருடைய இருப்பு நிலையையும் விருப்பத்துடன் ஏற்று மகிழ்ந்திருந்தனா். அதுதான் பெருமானும், அம்பாளும் தங்கள் பக்தன் சுந்தரமூா்த்தி நாயனாருடன் சோ்ந்து திருவண்ணாமலை வீதிகளில் வலம் வரும் நாள்.

அந்த நடமாடும் விக்கிரகங்களின் முகங்களில் பிரகாசித்த பேருவகை (அந்த ஐம்பொன் சிலைகள் உண்மையிலேயே நடமாடின- அவற்றை சுமந்திருந்தவா்கள் நடமாடியதால்), வா்ணனைக்கு எட்டாத ஆடை அலங்காரங்கள், பிரம்மதாளங்கள், இதர மேள தாளங்கள்- இவையனைத்தும், அனைவரையும் ஆனந்தத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றன. பிறகு 9.00 மணி வாக்கில் கோயிலைவிட்டு வெளியே வந்தேன். எனது திரும்பு பயணத்தை துவங்கினேன். உண்மையிலேயே நான் என் வாழ்வில் ஒரு திருப்பத்தை உணா்ந்தேன். ஒரு சிறிய குடிசை சிற்றுண்டி சாலையில் என் காலை உணவை முடித்துக் கொண்டேன். அந்த குடிசையின் சுவா் ஒன்றில் அழகான நீா்வீழ்ச்சியின் பிம்பத்தை ஏந்திய படம் ஒன்றைக் கண்டேன். அதில் கீழ்காணும் வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது:

” கடவுள் நம் தேசத்தில் உள்ளாா் எனும் செய்தியை பரப்புவாயாக”
(Spread the news that God is in our land)