"God is in Our Land"

ஆசிரியர் முன்னுரை

ஆசிரியர் முன்னுரை:

 

தெய்வீக அன்னையே போற்றி ! சத்குரு நாதனே போற்றி !!

என் பெயர் பாபுஜி. நான் தமிழ் நாட்டில் வசிப்பவன். நான் அடிப்படையில் ஒரு எழுத்தாளன் இல்லை. ஆனால், சில அடிப்படைக் கருத்துக்களை சொல்வதற்காக எழுத்தாளனாக மாற்றப்பட்டுள்ளேன்.

இனி, இந்நூலின் மையக் கருத்துக்கு வருவோம்.

“ஒவ்வொருவருடைய இறை இயல்பினையும், சமயத்தின் உண்மையான நோக்கினையும், பண்பாட்டின் உன்னதமான பணியினையும், இவையனைத்தையும் ஒருங்கே பெற்ற இந்தியாவின் தனித்துவத்தையும் எடுத்து இயம்பும் முகத்தான் இந்நூல் இறைச் சித்தத்தின்படி எழுதப் பெற்றுள்ளது.”

இந்த நூலின் நோக்கம் எளிமையானது. அந்த நோக்கத்திற்கான வழிமுறைகளும் எளிமையானவை. ஆனால், அதன் பலன் விலை மதிப்பற்றது, நிரந்தரமானது. இங்கு நம்மில் பலர் எளிமையை தேர்ந்தெடுப்பதில்லை. சிக்கல்களால் பின்னப்பட்ட வாழ்க்கை முறைகளில் உழன்று, அற்பமான மற்றும் குறுகிய சுகங்களுக்காக நம் வாழ்நாட்களில் பெரும்பாலானவற்றை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு கதை உண்டு: ஒரு தவ சீலர் ஒரு ஆன்மீக குருவை சந்திக்கிறார். அந்த குருவிடம் சொல்கிறார்: “நான் பல வருடங்கள் கடும் தவம் புரிந்து சிறப்பானதொரு சக்தியை பெற்றுள்ளேன்.” குரு வினவுகிறார்: “என்ன அது?”. அந்த தவமுனி தன் பதிலை செயல் மூலமாகவே காட்டுகிறார். அருகில் இருக்கும் ஒரு ஓடையில் இறங்கி, இக்கரையிலிருந்து மறுகரைக்குச்சென்று மீண்டும் இக்கரைக்கே வருகிறார் – தண்ணீர் மேல் நடந்தபடி. பெருமையுடன் குருவை நோக்கிச் சொல்கிறார், “பார்த்தீர்களா?”.

இதைக் கண்ட குருவானவர் அந்த சித்து முனிவர் குறித்து மிகவும் பரிதாபப்பட்டார். அவர் கூறுகிறார்: “ஓ முனிவரே! இத்தனை ஆண்டுகள் தவம் புரிந்து இதைத் தான் கற்றீர்களா? ஒரு கரையிலிருந்து மறுகறைக்குச் செல்லும் செயலை ஓர் ஓடைக்காரன் உதவியுடன் ஐந்தே நிமிடத்தில் யாராலும் செயது விட முடியும்.”

நம் வாழ்க்கையிலும் நாம் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். நாம் நமது விலை மதிப்பற்ற நேரத்தையும், சக்திகளையும் அற்ப விஷயங்களுக்காக செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நூல், நமது எளிய வாழ்வியல் இலக்குகளை ஞாபகப்படுத்துவதற்காக இயற்றப்பட்டுள்ளது. இந்த நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி, என்னுடைய பிற நூல்களிலிருந்து சில மேற்கோள்களைப் பெற்றுள்ளது. 2001 – ஆம் ஆண்டிலேயே இந்நூல் இயற்றப்பட்டாலும், இது வெளிச்சத்துக்கு வர நெடிய ஆண்டுகள் தேவைப்பட்டன. எனது தாயார் அறிவுறுத்தியிருந்தார்: “இச்செய்தியை பரப்புவதற்கு அவசரப்படாதே. நல்ல தருணத்திற்காகவும், உகந்த இடத்திற்காகவும், உற்ற சபைக்காகவும் நீ காத்திருந்தே ஆக வேண்டும்.” என் தாயார் குறிப்பிட்ட இவை யாவும் கூடி வந்திருப்பதாகவே நான் இப்பொழுது எண்ணுகிறேன்.

இந்த இலக்கை நிர்ணயித்தது இறைவனே. அதை முடிப்பதற்கான நபர்களை அனுப்பியதும் இறைவனே. அவர்களுக்கான அரங்கத்தை கொடுப்பதும் இறைவனே. என் தாயார் சொன்னது: “உன்னுடைய பரப்புதல், ஒரு பெருங்கூட்டத்திற்கு முன்பாகத் தான் எப்போதும் நடைபெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பகவத் கீதை, அதை கருத்துடன் கவனித்த அர்ஜுனன் எனும் ஒருவனுக்கு மட்டுமே நேரிடையாக போதிக்கப்பட்டது. இப்போது கீதை உலகத்தின் எல்லா எல்லைகளையும் எட்டியுள்ளது.” நான் இந்நூலை வாசிக்கும் அனைவரையும் அர்ஜுனர்களாகப் பார்க்கிறேன். இதற்குப் பொருள் ‘நான் பார்த்தசாரதி’ என்பதல்ல. நானும் உங்களைப்போல் ஒரு அர்ஜுனன் தான். நம் அனைவருக்கும் ஒரே ஆசான் கடவுளே ஆவார். இந்நூலின் பொருளினை, மையக் கருத்தினை வெளிப்படுத்தும் பணியில் நம் அனைவருக்கும் பங்குள்ளது. இறைவன் நம் ஒவ்வொருவரையும், அவரவருக்குரிய முறையில் வழி நடுத்துவாராக.

எனது ஆத்ம குருநாதர் ஸ்ரீ பரமஹன்ச யோகானந்தரின் கீழ்க் காணும் கூற்றை மேற்கோள் காட்ட இதுவே சரியான தருணம்:

“ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். கொஞ்சமும் வேறுபாடு இன்றி, ஒரே தன்மையராய் இருவர் இருப்பது என்பது இயலாத ஒன்று. உன்னைக் குறித்து இவ்வாறாக எண்ணிக்கொள். ‘என்னுடைய ஆளுமை கடவுளின் பரிசு. என்னைப்போல் வேறெவரும் இங்கில்லை. எனது தெய்வீகத் தனித்தன்மை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் என்னை மேம்படுத்திக் கொண்டு, நற்குணங்களின் ஆளுமையை வெளிப்படுத்துவேன்.’ நீ உன்னுடைய பங்கினை சிறப்பாக செய்வாயானால், ஓர் அரசன் அல்லது ஓர் அரசியின் பங்கைச் செய்யும் ஆத்மாவுக்கு நீ நிகரானவன் (அவர்களை விட நீ எந்த விதத்திலும் குறைந்தவன் அல்ல). நீ உன்னுடைய பங்கினை சரியாக செய்து வரும் வரையிலும், நீ அனைவரின் கவனத்தையும் கவரக்கூடியவனாகவும், அனைவராலும் அன்பு பாராட்டப்படுபவனாகவும் விளங்குவாய். நன்கு செயல்படுத்தப்பட்ட உன் பங்கே, கடவுளுக்கான உனது கடவுச் சீட்டு.”

திருச்சிற்றம்பலம்.